Tuesday, February 20, 2018

பாசவலை!

பாசவலை!


ஒருவாரம் தங்கிப் போகலாம் என்று தான் பெண் கொடுத்த சம்பந்தி வீட்டுக்கு வந்திருந்தாள் பங்கஜம். அங்கு அவள் கண்டது அவளுடைய கண்களாலேயே நம்ப முடியவில்லை. பங்கஜத்தின் சம்பந்தி ரஞ்சிதத்தை அவளுடைய மகனும் மருமகனும் போட்டிப் போட்டுக் கொண்டு தாங்கினார்கள்.

  ரஞ்சிதத்தின் பிறந்தநாளுக்கு மகன் ஒரு சேலை வாங்கி வந்து அசத்தினால் மருமகன் ஒரு படி மேலே போய் மோதிரம் வாங்கிக் கொடுத்து அசத்தினான். அன்னைக்கு பிடிக்கும் என்று இவன் ஸ்வீட் வாங்கி வந்து கொடுத்தால் அவர் மருமகனோ அதை ஊட்டி விட்டான்.
 
   ” என்னடி இது கூத்து? உம் புருஷன் இப்படி மாறிட்டான்! சதா அம்மா! அம்மான்னு அம்மா பின்னாடியே சுத்திகிட்டு திரியறான்! அது கூட பரவாயில்லை! உன் நாத்தனார் புருஷன் அவன் வீட்டை விட்டு வந்து இங்கேயே தவம் கிடக்கிறான்! உன் மாமியாருக்கு ஓண்ணுன்னா ஓவரா பதறுறான்! என்னடி நடக்குது இங்கே!”  பங்கஜம் தன் மகளிடம் கேட்டாள்.

   ”என் புருஷன் அவங்க அம்மாகிட்டே பாசமா இருந்தா என்ன தப்பு! நான் கூடத்தான் என் மாமியார் மேல பாசமா இருக்கேன்! அவங்களுக்கு பிடிச்சா மாதிரி நடந்துக்கிறேன்!
  மாமியார் ஆயிரம் குத்தம் சொல்கிறாள் என்று குறை சொல்லும் தன் மகளா இது? பங்கஜத்தால் நம்பவே முடியவில்லை!  இவர்களெல்லாம் இப்படி இருக்கிறார்கள் அங்கே தன் மகனும் மருமகளும் தன்னை ஒரு பொருட்டாகவே மதிப்பது இல்லை.

 அவர்கள் உண்டு அவர் வேலை உண்டு என்று இருந்து விடுகிறார்கள். பசிக்கு சோறு போடுகிறார்கள் அவ்வளவுதான். ஒரு பிறந்தநாள் உண்டா? ஒரு பரிசு உண்டா? ஒன்றுமே கிடையாது. மூன்று மருமகன்கள் இருந்து என்ன பிரயோசனம்? மாமியாரின் பிறந்தநாள், திருமண நாளை எவருக்காவது நினைவில் இருக்கிறதா?

மருமகன்களை விடு!  சொந்த மகன் அவனுக்காவது என் பிறந்தநாள் ஞாபகம் இருக்க வேண்டாமா? என்று தன் குடும்பத்தை நொந்து கொண்டார்.

   பங்கஜம் சோர்வாக இருப்பதையும் தனக்கு நடக்கும் உபசரணைகள் அவருக்கு சங்கடத்தை தருவதையும் புரிந்து கொண்ட ரஞ்சிதம் மெதுவாக அவளருகே வந்து சம்பந்தியம்மா! என்றழைத்தாள்.

         பங்கஜம் மெதுவாக முறுவலிக்க, ”சம்பந்தியம்மா! ஏதோ பெரிசா யோசனையிலே இருக்கீங்க போலிருக்கே!”

       ”அதெல்லாம் ஒண்ணுமில்லே சம்பந்தியம்மா!”

  ”நீங்க வாய்விட்டு அப்படி சொன்னாலும் உங்க முகம் உங்க கவலையை காட்டிக்கொடுக்குது!”

    ”கவலையா? எனக்கா? அப்படி என்ன கவலை எனக்கு?”

   ”மழுப்பாதீங்கம்மா!  இங்க என் மகன், மருமகன், மருமக என் கிட்டே பழகிறதும் எனக்கு உபசரணைகள் பண்றதும் உங்களுக்கு ஒரு ஏக்கத்தை உருவாக்கியிருக்கு! அங்க உங்க மகன், மருமகன், மருமக இப்படி இல்லையேன்னு ஒரு ஆதங்கம் உங்க முகத்துல எட்டிப்பார்க்குது! என்ன நான் சொல்றது சரிதானே!”

     தன் முகவாட்டத்தை வைத்தே தன்னை சரியாக எடைபோட்ட சம்பந்தியம்மாவை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் பங்கஜம். அவள் கண் கலங்கியது.

   ”ச்சூ! என்ன இது! இதுக்கு போய் கண் கலங்கறீங்க!  இங்கே நீங்க பாக்கிறது உண்மையான பாசம் இல்லை! இது ஒரு பாசவலை!  என் தாய் வீட்டு சொத்து ஒண்ணு 50 லட்சம் மதிப்பில ஒரு வீடு எனக்கு கிடைச்சிருக்கு! அது என் சொத்து அதை என் கிட்டே இருந்து மொத்தமா வாங்கிடனும்னு மகனுக்கும் மருமகனுக்கும் போட்டி! அதான் இப்படி தூக்கி வைச்சு கொண்டாடறானுங்க!  எங்கே பொண்ணுக்கே கொடுத்துடுவேணோன்னு பையனும்  பையனுக்கு கொடுத்துட்டா எப்படின்னு மருமகனும் மாத்தி மாத்தி பாசமழை பொழியறாங்க! அது என்கிட்டே இருக்கிற வரைக்கும் எனக்கு ராஜ உபசாரம்தான். 
      ” உங்க வீட்டுல அப்படியா? நீங்க தனியா பொழுதை கழிக்கணுமேன்னு நிறைய புத்தகங்களும் உங்களுக்கு தனி டீவி கனெக்‌ஷனும் கொடுத்திருக்காங்க! உங்களுக்கு சுகர் இருக்குன்னு உங்க பையனும் மருமகளும் ஸ்விட் நிறைய சாப்பிடறதே இல்லை! மாசம் ஒரு தடவை ஹெல்த் செக்கப்புக்கு கூட்டி போறாங்க!  பேரப்பசங்களை உங்க கூட விளையாட விட்டு ஒரு ஒட்டுறவை ஏற்படுத்தி இருக்காங்க!  விழா கொண்டாட்டம்னு எதுவும் செய்யலைன்னு வருத்தப்படறீங்களே! அவங்க நீங்க வந்ததுலே இருந்து எத்தனை தடவை போன் பண்ணி உங்களை விசாரிச்சாங்க! நீங்க ஒரு தரம் போன் பண்ணி இருப்பீங்களா? பேர பசங்க ரொம்ப ஆசைப்படுது சீக்கிரம் வந்திருன்னு உங்க பையன் கூப்பிட்டப்ப கூட இன்னும் நாலு நாள் கழிச்சு வரேன்னு சொன்னீங்க! இதுவே நான் என் மக வீட்டுக்கு போனா எப்ப துரத்தலாம்னு அவளும் இன்னும் ஒரு வாரம் கழிச்சு வந்தா தேவலைன்னு இவங்களும் இருப்பாங்க!”

  ” உங்க வீட்டுல காட்டுறதுதான் பாசமழை! இந்த வீட்டுல நடக்கிறது வெறும் பாச வலை! நீங்க கொடுத்து வைச்சவங்க!” என்று கண்கலங்க சொன்ன ரஞ்சிதத்தை  ஆறுதலாக  தட்டிக் கொடுத்து சம்பந்தியம்மா! என் கண்ணை திறந்திட்டீங்க! வாங்க! நாம் ரெண்டுபேரும் நம்ம வீட்டுக்கு போவோம்! என்றாள். பங்கஜம்.

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் இட்டு நிரப்புங்கள்! நன்றி!Monday, February 19, 2018

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

இருள்!
பெரிதாக்கி காட்டுகிறது!
தொலைதூர வெளிச்சம்!


பசி ஆறியதும்
அணைந்து போகிறது!
பற்றிய நெருப்பு!


கிழித்து எறியப்படுகிறது!
வாழ்ந்து முடித்த நாட்கள்!
நாட்காட்டி!


அடக்கி பழகுகிறார்கள்
பெண்கள்
கழிவறைஇல்லா பள்ளி!


விடிய விடிய கச்சேரி!
ரசிப்பதற்கு ஆளில்லை!
வயல் தவளைகள்!


வீழ்ந்ததும்
உயிர்த்தெழுந்தது பூமி!
மழைத்துளி!


இராப்பொழுதில் இடைவிடாத கச்சேரி!
கைதட்டல் வாங்கியது!
கொசு!


வீடு நிறைய வாசனை!
பரப்பிக்கொண்டிருக்கிறது!
கனிந்த பழம்!


ஈரக்கூந்தல்!
உதறின மரங்கள்!
மழை!


அழுக்கு சுமத்தியதும்
அழிந்து போனது
நதிகள்


இருண்ட பொழுது!
அழகாக்கின!
நட்சத்திரங்கள்!


மூடிய அறைக்குள்
கும்மாளமிட்டன 
கனவுகள்!


மொய்த்த கூட்டம்!
விரட்டி அடித்தான் பழக்கடைக்காரன்
ஈக்கள்!


தாழ்ந்தே இருக்கிறது
அன்னையின் மனசு!
குழந்தைக்கு துலாபாரம்!


 அழுதுகொண்டே
உறங்கிப்போனது!
குழந்தையின் பசி!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!

தளிரின் விருந்தினர் பக்கத்தில் உங்கள் படைப்புக்கள் இடம்பெற உங்களைப்பற்றிய ஓர் சிறு சுயவிவரத்துடன் உங்களின் படைப்பை 7904596966 என்ற வாட்சப் எண்ணிற்கு அனுப்பி வையுங்கள்! உங்கள் புகைப்படம் அனுப்ப மறக்க வேண்டாம்.  
உயின் பசி!

தினமணி கவிதை மணியில் வெளியான கவிதைகள்!

தினமணி கவிதைமணி இணையதள பக்கத்தில் சென்ற வாரமும் இந்த வாரமும் வெளியான எனது இரண்டு கவிதைகள். படித்து உங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் அன்பர்களே! நன்றி!தனிமையோடு பேசுங்கள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 12th February 2018 04:32 PM  |   அ+அ அ-   |  
யாருமற்ற ஒர்ப் பொழுதின் தனிமைதனில்
தனித்திருக்கையில் மெல்ல காதருகில் கேட்கும் குரல்!
ஆம்! தனிமை பேசுகின்றது!
நலம் விசாரிப்புக்குப் பின் தனிமையிடம் கேட்டேன்!
சுகம் தானே? சுகத்திற்கென்ன குறைச்சல்!
பின் ஏன் இந்த அலுப்பு?

தனித்திருக்க விடமாட்டேன்கிறாயே?
மோனம்தான் என் தவம்! மோனத்தை கலைத்து
என் தவத்தை தின்று தீர்க்கிறாய்?
ஒரு நொடியும் உன்னை பிரிவதில்லை கைபேசி!
கணிணிமுன் காலம் கடத்துகின்றாய்?
பெண்டாட்டி பிள்ளைகளை பிரிந்தாலும்
உன் காதுகளைவிட்டு பிரியவில்லை செவிவாங்கிகள்!
புத்தகங்களை தொலைத்துவிட்டாய்!

நட்புக்களை பிரிந்துவிட்டாய்!
தனிமைதனை உதறிவிட்டாய்!
பின் எப்படி நான் சுகமாயிருக்க முடியும்!
இன்று போல் என்றாவது ஒருநாளாவது
என்னோடு பேசு! என் இதயத்தை திற!

உன்னோடு பேச ஆயிரம் கதைகள் உண்டு என்னிடம்!
உன் கவசங்களை உதறி எறி!
தனிமை நேசிக்கையில் பேசிக்கொண்டிருப்போம்!
இனிமையாக கடந்து போகும் பொழுது!

அந்நாளே திருநாள்:  நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 17th February 2018 05:19 PM  |   அ+அ அ-   |  
பொழுது விடியும் ஒவ்வொரு நாளுமே
பொன்னாள் தான் அன்றைய பொழுதுக்கு!
உழைப்பின் பலன் உறுதியாய் பெற்றால்
உழைத்தவனுக்கு அந்நாளே திருநாள்!
வாடிய பயிர்கள் ஓடிய நீரால் மலர்ச்சிபெற்றால்
உழவனுக்கு அந்நாளே திருநாள்!

மூடிய ஆலைகள் மீண்டும் இயங்கினால்
தொழிலாளிக்கு அந்நாளே திருநாள்!
பசித்திருந்த ஒருவனுக்கு பல்சுவை விருந்து
கிட்டுமேயானால் அந்நாளே திருநாள்!
வறண்ட நதிகளில் எல்லாம் திரண்ட வெள்ளம்
பெருக்கெடுத்தால் தமிழனுக்கு அந்நாளே திருநாள்!

பின் தங்கிய கல்வியில் முன்வந்த
மாணாக்கர்களுக்கு முழுநாளும் திருநாள்தான்!
இலஞ்சம், வழிப்பறி, திருட்டு, கொள்ளை வழக்கொழிந்து
இல்லை கொள்ளை என்ற நிலை என்று வருமோ
அன்றே எல்லோருக்கும் திருநாள்!

பசி பட்டினி, வறட்சி, என்பவை மாறி
வளமை புகுந்து வறுமை ஒழியும் நாள் வருமோ
அன்றே தமிழர்க்கு திருநாள்!
தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை
பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Monday, February 12, 2018

தினமணி-கவிதைமணி- வஞ்சம் செய்வாரோடு!


வஞ்சம் செய்வாரோடு: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 03rd February 2018 01:20 PM  |   அ+அ அ-   |  
எண்ணத்தில் நஞ்சை வைத்தே என்றும்
இனிக்க இனிக்க பேசி
உள்ளகத்தே ஒன்றும் வெளியகத்தே ஒன்றும்
கள்ளம் வைத்து வஞ்சம் செய்வாரோடு
எட்டத்தே நிற்றல் இனிமை பயக்கும்!
கிட்டத்தே எட்டிடும் உயரமும்
கிட்டாமல் செய்திடும் வஞ்சம்!

பள்ளத்தில் தேங்கிடும் தண்ணீர் போல
உள்ளத்தே தேங்கிடும் வஞ்சம்!
பள்ள நீர் பாசி பிடித்து மாசாகும்!
உள்ள வஞ்சம் வளர்ந்து மோசமாகும்!
வஞ்சனைகள் செய்வாரோடு பழகப்பழக
வெஞ்சினங்கள் வந்து சேரும்!

பஞ்சணையில் படுத்தாலும் துயில் பிடிக்காது
பசித்து சாப்பிடவே மனமிருக்காது!
பஞ்சத்தில் அடிபட்டாலும் பிழைத்திடலாம்
வஞ்சத்தில் அடிபட்டால் வழியிருக்காது!
நஞ்சினினும் கொடிது வஞ்சம்!
நெஞ்சினில் அடையும் தஞ்சம்!
நஞ்சுக்கு உண்டு முறிவு !

வஞ்சனைக்கு இல்லை உய்வு!
வஞ்சனைக்கு கொடுக்க வேண்டாம் இடம்!
வஞ்சம் செய்வாரோடு பழகாதிருத்தல் திடம்!
தங்கள் வருகைக்கு நன்றி! கவிதை குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே!

  தினமணி கவிதை மணி! நல்லதோர் வீணை

  தினமணி கவிதை மணியில் ஜனவரி 29ம் தேதி பிரசுரமான எனது கவிதை!  நல்லதோர் வீணை:  நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

  By கவிதைமணி  |   Published on : 29th January 2018 03:23 PM  |   அ+அ அ-   |  
  பிறக்கையில் எவ்வுயிரும் நல்லுயிரே!
  பிறர் கையில் சிக்கி வளர்க்கையில்தான் பிழை
  வடிக்கையில் எவ்வீணையும் நல்லதோர் வீணைதான்!
  
  அதை மீட்டுகையில் எழுவதுதான் சுபஸ்வரமோ அபஸ்வரமோ!
  உதிக்கையில் கதிரவன் அழகே தான்
  உச்சிக்கு வருகையிலே அவன் தணலேதான்!
  
  மேகம் பொழியும் நீருக்கு சுவையில்லை!
  பிடிக்கும் பாத்திரமான பூமி கொடுக்கும் சுவையோ பல்வகை!
  வீசும் காற்றுக்கும் வெளியில் எந்த மணமில்லை!
  
  வாசம் கடத்தி வலுவில் பழியை சுமக்கிறது!
  பூமியில் பிறக்கும் எவ்வுயிரும் நல்லுயிர்தான்
  பொய்யும் புரட்டும் களவும் திருட்டும்
  ஜனிக்கையில் உதிப்பதில்லை!
  
  சூழலும் சமூகமும் சூழ்ச்சியும் காழ்ப்பும்
  கடவுளைக்கூட சாத்தானாக்கும்!
  இனிய இசைதனை வார்க்கும் எல்லா வீணையும்
  என்றும் நல்லதோர் வீணையே!
  
  மீட்டும் மனிதரில் மாற்றம் வருகையில்
  நாட்டில் நல்லதோர் மாற்றமாய்
  இசைத்திடும் இனியதை என்றும் நல்லதோர் வீணை!

  தினமணி கவிதைமணி! யுத்தம் செய்யும் கண்கள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

  யுத்தம் செய்யும் கண்கள்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

  By கவிதைமணி  |   Published on : 15th January 2018 03:36 PM  |   அ+அ அ-   |  
  கண்களும் ஒரு கணைதான்!
  வில்லாயுதம் வளைக்காத வீரனையும்
  கண்ணாயுதம் வளைத்துவிடும்!
  காதல் யுத்தத்தில்
  கண்களால் வீசப்படும் கணைகள்
  இதயத்தை கொள்ளை கொள்ளும்!

  மவுன யுத்தத்தில்
  கண்கள் பேசும் வார்த்தைகள்தான்
  வெற்றியை நிறைவு செய்யும்!
  ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியா சேதியை
  அரைநொடியில் கண்ணசைவில் உணர்த்தும்!
  கண்களின் மொழி அன்பாயிருந்தால்
  பாசம் வெற்றிகொள்ளும்!
  கண்களின் மொழி வேசமாயிருந்தால்
  மோசம் வெற்றிக்கொள்ளும்!
  கண்களின் மொழி வீரமாயிருந்தால்
  ”வெற்றி” வெற்றிக்கொள்ளும்!
  கண்களின் மொழி துயரமாயிருந்தால்
  சோகம் வெற்றிக்கொள்ளும்!
  கண்களின் மொழி குறும்பாயிருந்தால்
  அங்கு கலகலப்பு” தொற்றிக்கொள்ளும்!
  கண்களின் மொழி கசப்பாயிருந்தால்
  அங்கே  ”வெறுப்பு” வெற்றிக்கொள்ளும்!
  கண் வீசும் கணைகள்
  சாம்ராஜ்யத்தையும் சாய்க்கும்!

  யுத்தம் செய்யும் கண்கள்
  பித்தம் பிடிக்க வைக்கும்!
  நித்தம் நினைவில் நிலைக்கும்!

  தினமணி கவிதை மணியில்  ஜனவரி 15ம் தேதி வெளியான என் கவிதை.

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

  Sunday, February 11, 2018

  தளிர் விருந்தினர் பக்கம்! “சண்டே கெஸ்ட்” சீர்காழி.ஆர்.சீதாராமன்

  வணக்கம் வாசக நண்பர்களே!  தளிர் வலைதளத்தில் உங்களை எல்லாம் தொடர்ந்து சந்திப்பதில் கொஞ்சம் சுணக்கம் ஏற்பட்டுவிட்டது. இனி சுணக்கம் விடுபட்டு தொடர்ந்து பதிவுகள் எழுத விரும்புகிறேன். ஏழு ஆண்டுகளை கடந்துவிட்ட தளிரில் கொஞ்சம் மாற்றங்களையும் புகுத்த விரும்புகிறேன். அதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில்  விருந்தினர் பக்கமாக தளிரை மிளிர விட உள்ளேன்.

     ஒவ்வொரு ஞாயிறன்றும் விருந்தினர் ஒருவரின் எழுத்துக்கள் தளிரில் இடம்பிடிக்கும்.அத்துடன் உங்கள் மனதினிலும் இடம்பிடிக்கும்.   விருந்தினர்கள் என் சக வலைப்பூ எழுத்தாளர்கள், மட்டுமில்லாமல் பிரபல பத்திரிக்கைகளில் எழுதும் சிலரும் இந்த பக்கங்களில் இடம் பெற உள்ளார்கள்.

  நீங்களும் இந்தப்பகுதியில் உங்கள் படைப்புக்கள், கதை, கவிதை,ஜோக், கட்டுரை எதை வேண்டுமானாலும் எழுதலாம். உங்கள் படைப்புக்களை  thalir.ssb@gmail.com என்ற முகவரிக்கோ அல்லது 7904596966 என்ற வாட்சப் எண்ணிற்கோ அனுப்பி வையுங்கள்.  உங்கள் பதிவுகள் சிறப்பாக இருப்பின் தொடர்ந்து தளிரில் பதிவிடப்படும்.

  இன்றைய ஞாயிறு விருந்தினர்

  சீர்காழி ஆர் .சீதாராமன்.    படிப்பு எம். இ. தெர்மல் .

  பெரும்பாலான வார மாத இதழ்களில் நகைச்சுவை துணுக்குகளில் இந்தப்பெயரை அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம்.  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இவர் 1992ல் இருந்து பல பத்திரிக்கைகளில் ஜோக்ஸ், கவிதை, ஹைக்கூ, துணுக்குகள் என பல்சுவை பகுதிகள் எழுதி வருகிறார். தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுவின் இரண்டாம் ஆண்டு சந்திப்பிற்கு பெரிதும் பங்காற்றியவர்.கும்பாபிஷேகங்கள் பலவற்றில் கலந்து கொண்டு உதவியுள்ளார். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளவர்.  வெள்ளி விழா படைப்பாளி    சேவா பூஷண் விருது    பெற்றுள்ளார்  3000 மேல் படைப்புக்கள் எழுதியுள்ளார்.   அவருடைய படைப்புக்கள்  கீழே!


      ஹைக்கூக் கவிதைகள்!

  " எண்ணச் சிதறல் 
  இயலாமையின் பிறப்பிடம்
  முதுமை "

  " திரைமறைவில் சாமிக்கு நிவேதனம்
   திறந்த வெளியில் 
  பிரசாதம் விநியோகம் "

  " கோவில் கதவு அடைத்ததும்
     உறங்க வழி கிடைத்தது
   சாமிக்கு "

  " வெற்றியின் நெடுநாள்
    ரகசியம் 
  கடின உழைப்பு "

  " வரவுக்கும் செலவுக்கும்
    மோதல் 
  பற்றாக்குறை "

  " அரிசி மூட்டையில் ஓட்டை
    பசியாறியது 
  ஆயிரம் ஆயிரம்
     ஜீவன் "

  " மழை நின்ற பின்னும்
    அடையாளம் காட்டியது
    இலையில் வழியும் சொட்டு நீர் "

  " வலியும் வேதனையும் புரிந்தது 
  வெளியில்  தெரியவில்லை 
  பாவ மூட்டை "


  " வானத்தில் 
  நவீன வளைவுகள்
     அழகான வானவில் "

  " மலையில் பொங்கி வழியும்
    நெருப்புக் குழம்பு
   எரிமலை "

  " திகட்டாத தேன்
   அமுதம்
     மழலை ரசம் "

  " நறுமணத்தின் 
  மொத்த ஏஜண்ட்
     நந்தவன மலர்கள் "

  " மனதில் நினைத்ததை
   சொல்ல முடியாத தருணம்
   மரண நேரம் "
    
  " விழிகள் காட்டிய 
  புதிய பாதை
    மலர்ந்த  காதல் "

  " எதிலும் முந்தி முந்தி போராட்டம்
   இல்லாமையின்
  வெளிப்பாடு "

  " உறவுகள்
   பிரிவுகள் தந்தது
    அனுபவ பாடம் "

  " வானத்தை பார்வையிட 
  புனித பயண வாகனம்
    வானவூர்தி "  படைப்பாளரின் முகவரி:

  - சீர்காழி.ஆர் .சீதாராமன் .
        18 A . பட்டேல் தெரு .
        தென்பாதி .சீர்காழி .
           609  111 .
          9842371679 .

  தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! நன்றி!
  Related Posts Plugin for WordPress, Blogger...