தோல்விக்கு காரணம்! பாப்பா மலர்!


தோல்விக்கு காரணம்!

அங்கத புரி என்ற நாட்டில் அம்ச வாகனன் என்ற பலசாலி ஒருவன் வாழ்ந்து வந்தான். மிகப்பெரிய மல்யுத்த வீரன் அவன். பலநாடுகளுக்கும் சென்று பல பலசாலி வீரர்களை வென்று சாதனை படைத்தவன். பல்வேறு நாடுகளில் திறமைசாலிகளான வீரர்களை தோற்கடித்து மல்யுத்த திலகம் என்ற பட்டப் பெயரை பெற்றவன் அம்ச வாகனன்.
      சில நாடுகளில் அவன் போட்டிக்கு வருகிறான் என்றாலே மல்யுத்த வீரர்கள் பின் வாங்கி விடுவார்கள்.சிலர் எதற்கு வீண் வம்பு என்று தாங்களாகவே முன் வந்து தோல்வியை ஒப்புக் கொண்டு போட்டியில் இருந்து விலகி விடுவார்கள். இவ்வாறு அம்ச வாகனன் புகழ் எங்கும் பரவி இருந்தது.
 அளவுக்கு அதிகமான புகழ்ச்சி அம்சவாகணனைஅகம்பாவம் கொள்ள வைத்தது. தனக்கு இணையான வீரன் யாரும் இவ்வுலகில் இல்லை என்று மண்டைக் கர்வம் அவனை பிடித்துக் கொண்டது.தன்னை வெல்ல யாருமில்லை என்று அகந்தையுடன் திரிந்தான். தினமும் செய்யும் பயிற்சிகளை விட்டொழித்தான். சுகபோகமாக வாழ ஆரம்பித்தான். இனி எவனும் தன்னோடு மோத மாட்டான் என்று ஆணவத்துடன் வாழ்ந்தான் அம்ச வாகனன்.
      அச்சமயத்தில் அங்கத புரி அரசன் ஒரு மல்யுத்தபோட்டியை நடத்த விரும்பினான். போட்டியை அறிவித்து நாட்டின் சிறந்த மல்யுத்த வீரனான அம்சவாகனனோடு மோதி வெற்றி பெறுவோருக்கு ஏராளமான பரிசுகளை தருவதாக அறிவிப்பு செய்தான்.
   போட்டி என்றதும் ஆவலோடு வந்த பலரும் அம்ச வாகனன் பெயரைக் கேட்டதும் ஓடிவிட்டனர். அம்ச வாகனனோடு மோதலா? வேண்டாமடா சாமி! நம் உயிர் தப்ப வேண்டுமானால் மோதாமல் இருப்பதே நல்லது! பணமா உயிரா என்றால் உயிர்தானே பிரதானம் அம்ச வாகனனோடு மோதி உயிர் இழப்பதை விட மோதாமல் இருக்கலாம் என்று பலரும் கழன்று கொண்டனர்.
   அம்ச வாகனனுக்கு பெருமிதமாக இருந்தது. அரசே என்னுடன் போட்டியிடக் கூடியவர்கள் யாரும் இவ்வுலகில் இல்லை! வேண்டுமானால் மற்றவர்களை ஒருவரோடு ஒருவர் மோதவிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு தங்கள் கையால் பரிசு கொடுத்து மகிழுங்கள் என்று எகத்தாளமாக கூறினான் அம்ச வாகனன்.
   மன்னனுக்கு அவமானமாக போய்விட்டது. இவனோடு போட்டியிட யாரும் தயார் இல்லையா? என்று கேட்டான். அப்போது ஓர் விவசாயி அரசே நான் இவனோடு போட்டியிடத் தயார் என்று முன் வந்தான்.
  அம்ச வாகனனுக்கு அதிர்ச்சியாக இருந்தது! இருந்தாலும் சமாளித்துக் கொண்டு டேய் உயிர் மேல் ஆசையிருந்தால் ஓடிவிடு! என்று அறை கூவல் விடுத்தான். அந்த விவசாயியும் என் உயிர் மீது உனக்கேன் இவ்வளவு அக்கறை? தைரியமிருந்தால் வந்து சண்டையிடு என்று பதில் அறைகூவல் விடுத்தான்.
விவசாயியின் அறை கூவல் அம்சவாகனனுக்கு அதிர்ச்சியாக இருந்தது தன்னை எதிர்க்க யாரும் இல்லை போட்டியிடாமலே வென்று விடலாம் என நினைத்த அவனுக்குப் பெரும் ஏமாற்றமாகிப் போனது. விவசாயி அழகப்பனுடன் மோத தயார் ஆனான்.
    அழகப்பன் விவசாயி என்றாலும் உழைத்து உரமேறிய உடல் கட்டு பெற்றிருந்தான். அவனது உடல் கட்டை பார்த்த அம்ச வாகனன் பயத்தில் நம்பிக்கை இழந்தான். அவனது பயமே அழகப்பனுக்கு உதவியது.போட்டியின் முதல் சுற்றிலேயே பலத்த அடி வாங்கிய அம்சவாகனன் தோற்றுப் போனான்.
  அம்சவாகனன் தோல்வி அரசனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அழகப்பா நீ எப்படி பலசாலியான அம்ச வாகனனை தோற்கடித்தாய் என்று வினவினார்.
   அரசே அம்ச வாகனன் பலசாலிதான்! ஆனால் அகந்தை அவனை அழித்துவிட்டது. தன்னை வெல்ல யாருமில்லை என்ற அகந்தையில் பயிற்சிகளை செய்யாமல் சுகபோகத்தில் ஈடுபட்டான். நான் அறைகூவல் விட்டதும் நம்பிக்கை இழந்தான். பதட்டத்தில் தவறு செய்ய ஆரம்பித்தான் அதுவே அவனை வீழ்த்திவிட்டது என்றான் அழகப்பன்.
  ஆம்! பயிற்சியே பலம் இதை இன்று நான் உணர்ந்தேன்! இனி தவறாது பயிற்சி செய்வேன் என்றான் அகந்தை விட்டொழித்த அம்ச வாகனன்!.
   அழகப்பனுக்கு பரிசுகள் கொடுத்து கவுரவித்தார் அரசர்.


அறவுரை!

நாலடியார்

கடிப்பிடு கண்முரசம் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தார் எனப்படுஞ் சொல்.

விளக்கம்} குறுங்கோலால் அடித்து ஒலிக்கப் படும் முரசின் ஒலியை ஒரு காத தூரம் வரையில் இருப்போர் மட்டுமே கேட்பர். மேகத்தின் இடியோசையை ஒரு யோசனை தூரம் வரை இருப்போர் மட்டுமே கேட்பர். ஆனால் தகுதி உடையவருக்கு கொடுத்தார் என்னும் புகழ்சொல்லை ஒன்றன் மேல் ஒன்றாக உள்ள மூவுலகங்களிலும் உள்ளோரும் கேட்பர்.

உங்களுக்குத் தெரியுமா?

ஐந்து கடல்களின் நாடு என்பது எகிப்து

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. காலத்திற்கேற்ற பதிவு, குழந்தைகள் ஆறிய வேண்டிய அரிய பதிவு. நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2