வேண்டாமே பொறாமை! பாப்பா மலர்!

வேண்டாமே பொறாமை!

   ராமுவும் கோபுவும் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் பயில்கின்றனர். ராமு பள்ளியில் முதலிடம்.கோபுவோ மூன்றாவது இடம். ராமுவே எதிலும் முதலிடம் பெறுவது கோபுவிற்கு வெறுக்க வில்லை! அவன் சகஜமாகவே பழகி வந்தான்.
     இந்நிலையில் கோபுவுடன் பயிலும் சில மாணவர்கள் அவனைத் தூண்டிவிட்டனர். ராமுவைப் பார்! எதிலும் முதலிடம் பெறுகிறான் படிப்பிலாகட்டும் விளையாட்டிலாகட்டும் அவனை உன்னால் முந்த முடிகிறதா? எப்போதும் மூன்றாமிடம் தானே உன் நிலை என்றாகிவிட்டது. ஒரு முறையேனும் அவனை வீழ்த்தியிருக்கிறாயா? என்று தூண்டிவிட்டனர்.
    அதற்கு நான் என்ன செய்வது நண்பர்களே! அவனை ஒவ்வொரு முறையும் முந்த முயல்கிறேன்!ஆனால் முடியவில்லை அவனது திறமையால் அவன் ஜெயிக்கிறான். இதைப்போய் குற்றம் சொல்ல வந்து விட்டீர்களே என்று கோபு சொல்லிவிட்டான். ஆனாலும் அவனது நண்பர்கள் தொடர்ந்து தூண்டிவிட கோபுவிற்கு ராமுவின் மேல் பொறாமை வந்தது.
    குளவி கொட்டகொட்ட புழுவும் குளவியாவது போல கோபுவும் மாறிப்போனான். சதா இவனே முதலிடம் பெறுகிறானே ஆசிரியர்களும் அவனுக்கே சலுகை தருகின்றனர். அவனில்லாவிட்டால் நாம் முதலிடம் பெற்றுவிடலாம் என்று பொறாமைப் பட ஆரம்பித்தான்.
    ராமுவைக் கண்டாலே பிடிக்காது போயிற்று கோபுவிற்கு இவனை எப்படி பின்னடைய வைக்கலாம் என்றே சிந்திக்க துவங்கி விட்டான். நாம் எப்படி முன்னேற வேண்டும் என்று சிந்திக்க மறந்து ராமுவை தோற்கடிக்க வைப்பதே குறிக்கோளாக செயல்பட்டான். அதற்கான நேரத்திற்காக காத்திருந்தான்.
இருவரும் பள்ளியின் விடுதியில் தங்கியிருந்தனர். இருவரும் ஒரே அறை! முதலில் இந்த ஒரே அறையில் தங்குவதற்கு சந்தோஷப்பட்ட கோபு பொறாமை எண்ணம் வந்ததும் ஏண்டா இவணுடன் தங்குகிறோம் என்று வருத்தப்பட ஆரம்பித்தான்.
    ஒருநாள் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகளுக்கான சுற்றறிக்கை வந்தது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் தகுதி போட்டிக்காக காலை ஆறு மணிக்கு பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு வரும்படி அறிக்கை வந்தது.
         இதுதான் ராமுவை பழிவாங்க சிறந்த சந்தர்ப்பம் என்று கோபு எண்ணிக்கொண்டான். அன்று அதிகாலை 5 மணிக்கு வைக்கும் அலாரத்தை 6.30 மணியாக மாற்றி வைத்துவிட்டு படுத்துக் கொண்டான் கோபு. விடுதியில் அனைவரும் 5 மணிக்கே எழுந்து படிப்பது வழக்கம் அதனால் எப்பொதும் 5 மணிக்கு அலாரம் வைத்து எழுவார்கள். அதைத்தான் கோபு மாற்றி வைத்தான். 6 மணிக்கு விளையாட்டு மைதானம் போக வேண்டும் ஆனால் 6.30 க்கு அலாரம் வைத்து தாமதப் படுத்தி ஆகி விட்டது. இனி அவனால் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. நாம் கலந்து வெற்றி பெற்று விடலாம் என நினைத்தான்.

    அதிகாலை 5 மணிக்கு ராமு எழுப்பியதும் கண் விழித்தான் கோபு! நம் திட்டம் என்ன ஆயிற்று? இப்படி நமக்கு முன்னரே எழுந்து நம்மை எழுப்புகிறானே இந்த ராமு என்று திடுக்கிட்டான் கோபு.
    ராமு அலாரம் அடிக்க வில்லையே நீ எப்படி எழுந்தாய்? நான் 6.30க்கு அல்லவா அலாரம் வைத்தேன் என்று உளறினான். என்னது 6.30க்கு வைத்தாயா? ஏன்? இன்று தகுதித் தேர்வு ஆறு மணிக்கு என்று உனக்குத் தெரியும் தானே! அலாரம் அடிக்கவில்லை என்று தெரிந்தும் ஏதோ கோளாறு என்று நினைத்தேன்! நீதான் இப்படி செய்தாயா? ஏன் இப்படி செய்தாய் நண்பா என்றான் ராமு!
   கண்களில் நீர் மல்க நண்பா! அப்படி உன்னை கூப்பிட எனக்கு அறுகதை இல்லைதான்! பொறாமைத்தீயில் வெந்து நீ போட்டியில் கலந்து கொள்ள கூடாது என்று அலாரத்தை மாற்றி வைத்தேன்! நீயோ என் சூழ்ச்சி அறியாது தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி போட்டிக்கு செல்ல அழைக்கிறாய்! நான் பாவி! என்னை மன்னித்துவிடு! என்று அழுதான்.
     கோபு போட்டி இருக்கலாம் அது பொறாமையாக மாறக் கூடாது! நீயும் தொடர்ந்து பயிற்சி எடுத்து முயற்சி செய்! கட்டாயம் போட்டியில் வெற்றி பெருவாய்! அப்போது மகிழ்பவன் என்னை விட யாராக இருக்க முடியும்? என்றான் ராமு.
    நண்பா நான் தவறை உணர்ந்தேன்! சொல்வார் பேச்சை கேட்டு சொந்த புத்தியை இழந்தேன்! இன்று அதை திரும்ப பெற்றேன்! இன்று நீயும் தூங்கி இருந்தால்! அது பெரிய தவறாக அல்லவா போயிருக்கும் என்றான் கோபு!
   நான் அதிகாலையில் எழுந்து எழுந்து அலாரம் இல்லாமலே எழுந்துவிடும் பழக்கம் வந்து விட்டது! அதனால் அதிகாலையில் அலாரம் அடித்தாலும் இல்லா விட்டாலும் எழுந்துவிடுவேன்! இதுதான் என்னை காப்பாற்றியது! சரி சரி சீக்கிரம் கிளம்பு! போட்டிக்கு செல்ல நேரமாகிவிட்டது என்றான் ராமு!
    நண்பா! நல்லவர்களுக்கு நல்லதே நடக்குமென்பது உன்னால் உணர்ந்தேன்! வா போகலாம் என்று அவனோடு புறப்பட்டான் கோபு!

 அறவுரை!

  திருக்குறள்!
  எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு
  அவ்வது  உறைவது அறிவு

விளக்கம்} உலகில் அனுபவம் வாய்ந்த பெரியோர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்களோ அவ்வாறே நாமும் நடந்து கொள்ள வேண்டும். அதுவே அறிவுடைமை ஆகும்.

உங்களுக்குத் தெரியுமா?
 வடக்கின் வெனிஸ் எனப்படுவது ஸ்டாக்ஹோம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபல படுத்தலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!