பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 14


பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 14

உங்கள் ப்ரிய “பிசாசு”

முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினொத் கூட்டி வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதாக கூறுகிறார்கள். அதற்கேற்பவே அவள் நடவடிக்கைகள் இருக்கிறது. அவள் மணியிடம் அவரது பேத்தி கதையை கூறும்படி கேட்கிறாள். முகேஷின் நண்பன் ரவியை பிடித்துள்ள பேயை விரட்ட திருப்பதிக்கு அழைத்துசெல்கிறான். வழியில் ரவி காணாமல் போகிறான். முகேஷ் மட்டும் திருப்பதி சித்தப்பா வசிக்கும் மலைக்கு செல்கிறான். அங்கு தன் சித்தப்பா பேய் விரட்டும் காட்சியை பார்த்து மிரள்கின்றான்.
   முந்தைய பதிவுகளுக்கான லிங்க் இங்கே!

http://thalirssb.blogspot.in/2012/10/12.html  பகுதி 12 
http://thalirssb.blogspot.in/2012/11/13.html பகுதி 13
இனி:

   எனக்கு எல்லாம் தெரியும் நீங்க பாயை பார்க்க போறதும்  இந்த வீணாவுக்கு தெரியும் என்ற செல்வியை மிரட்சியுடன் பார்த்த மணி  என்னமா சொல்றே? உம் பேரு செல்விதானே! என்றார்
    அது இப்போ! ஆனா போன ஜென்மத்துல நான் வீணா!
வீணாவா என்னம்மா சொல்றே?
  என்ன மணி மாமா! என்னை தெரியலை உங்களுக்கு! நான் தான் பிரவீணா! ஆப்ப கடை வைச்சிருந்தாங்களே பார்வதியம்மா அவங்களோட ஒரே பொண்ணு!
    அட என்னம்மா கதை இப்படி போவுது சரி!  நீதான் நீ விரும்புனவனோட ஊரை விட்டே போய் அப்புறம்  தீவிபத்துல இறந்து போனதா சொன்னாங்களே நீ ஏன் திரும்பவும் இங்க வந்தே?
   மணி சகஜமாக பேசினார். தீ விபத்து என்று அவர் சொல்லும் போது செல்வியின் முகம் ஆக்ரோஷமடைந்தது. அவள் பெரும் மூச்சு விட்டாள். அப்படியே மயங்கி விழுந்தாள். ச்

  செல்வி செல்வி!  ஏம்பா பார்த்துகிட்டு நிக்கறே உள்ளே போயி சொம்புல கொஞ்சம் தண்ணி கொண்டு வா!  மணி விரட்ட ராகவன் உள்ளே நுழைந்தான்.
   சிறிது தண்ணீரை செல்வியின் முகத்தில் தெளித்த போது மெதுவாக கண்விழித்தாள் தான் கீழே விழுந்து கிடக்க தன்னை சுற்றி நான்கு பேர் நின்றிருக்க அவளுக்கு வெட்கமாகி விட்டது. அப்படியே எழுந்தாள்.
  பார்த்தும்மா! ஒண்ணும் இல்லே! பயப்படாதே! போ போய் ரெஸ்ட் எடு என்றார் மணி.
  அவள் உள்ளே சென்றதும் என்னங்க இது! இந்த பொண்ணு என்னென்னமோ சொல்லுது! என்றான் ராகவன்.

   அது ஒண்ணும் தப்பா சொல்லலை! இது பிரவீணா!  இப்ப வினோத் தம்பி போய் கதவை தட்டிகிட்டு நின்னாரே அந்த வீட்டுல இருந்த பொண்ணுதான் இது. அவங்கம்மா பார்வதி இட்லி ஆப்பம் சுட்டு வியாபாரம் பண்ணிகிட்டு இருந்தாங்க! கொஞ்சம் ஏழ்மையான குடும்பம்! இந்த பொண்ணு பார்க்க லட்சணமா அழகா இருக்கும். கஷ்ட ஜீவனம்னாலும் அந்த அம்மா பொண்ணை கஷ்டபட்டு படிக்க வைச்சி காலேஜிக்கு அனுப்பிச்சு அங்கதான் ஆரம்பிச்சது வினை!
   காலேஜிக்கு போகவர அங்க ஒரு பையன் பக்கத்து ஊர்க்காரன் தான் பழக்கம் வந்துச்சு! அவங்கப்பன் இந்த காதலை ஒத்துக்கலை! ஆனா அவன் தீவிரமா இந்த பொண்ணைத்தான் கட்டிக்குவேன்னு இருந்தான். ஒருநாள் ரெண்டும் சொல்லாம கொள்ளாம கிளம்பி போய் கோயில்ல தாலி கட்டிகிச்சுங்க! அப்புறம் ஊரை விட்டே கிளம்பிடுச்சுங்க! ஒரு ஆறு மாசம் கழிஞ்சிருக்கும் இந்த பொண்ணு அடுப்பு பத்தவைக்கும் போது தீப்பிடிச்சு இறந்துட்டதா சொன்னாங்க! அவ அம்மா அப்பவே நிலை குலைஞ்சு போயிட்டா! இதுக்கா எம்பொண்ணை பெத்தேன்னு அதே நினைப்புல நோய் வாய்ப்பட்டு போய் சேர்ந்துட்டா!  அந்த வீணா தான் இந்த செல்வியோட உடம்புல புகுந்திகிட்டா போலிருக்கு என்றார்

     என்னங்க இது! ரொம்ப ஆச்சர்யமா இருக்குது! வீணா இந்த ஊரு! செல்வியோ சென்னை பக்கம் எப்படி வீணா செல்வியை பிடிச்சிருக்க முடியும்.
    வீணா கல்யாணம் பண்ணிகிட்டு சென்னையில தான் வாழ்ந்தா! செத்ததும் அங்கே தான்! எனக்கென்னமோ இவங்க ரெண்டு பேருக்கும் ஏதோ பழக்கம் இருக்கும்னு தோணுது! எதுக்கும் நாளைக்கு பாய் கிட்ட போய் பார்த்தோம்னா எல்லா விசயமும் வெளிச்சத்துக்கு வந்துடும்..
      சரி! அப்படியே இவ வீணாவா இருந்தா என்ன பண்றது? செல்வியோட நிலை என்னாகிறது. இவ பண்ற எல்லாமும் செல்வியை இல்லே பாதிக்குது!
  அதுக்கு நாம ஒண்ணும் பண்ண முடியாது தம்பி! பேயை விரட்டற வரைக்கும் இந்த கஷ்டத்தை  செல்வி அனுபவிச்சுத்தான் ஆகனும். அப்புறம் எல்லாம் சரியாயிடும்!
சரி விடிஞ்சிடுச்சு நான் வீட்டுக்கு போயிட்டு வரேன்! ஒரு பத்து மணிக்கா நாம் போய் பாயை பாத்துட்டு வந்திடலாம் துண்டை  உதறி தோளில் போட்டுக்கொண்டு நடந்தார் மணி.
  வினோத்திற்கு எல்லாம் ஆச்சர்யமாக இருந்தது. ராகவா! எல்லாமே ஒரே குழப்பமா இருக்கு! செல்விக்கு என்ன ஆச்சு? ஒரே புரியாத புதிரா இருக்கே!
     ராகவன் வினோத்தை தட்டிக் கொடுத்தான். ஒண்ணும் கவலைப்படாதே வினோத். நீயும் இந்த மாதிரி எத்தனையோ கேள்விப்பட்டிருப்பே! பார்த்தும் இருப்பே! ஆனா அது நமக்கே நடக்கும் போது பயந்துடறோம். இதெல்லாம் கிராமத்தில் சகஜம்! பேய் பிடிக்கிறது!  வெப்பிலை அடிக்கிறது! மந்திரிக்கிறது எல்லாம் இங்க அடிக்கடி நடக்கறதுதான். என்ன ஒண்ணு அது இப்ப நம்ம வீட்டுல நடக்குது.
   இல்ல ராகவா! செல்வியோட எதிர்காலம்?
 அது ஒண்ணும் அப்படி மோசமா அமையாது. மணி சொன்ன பாய் ரொம்ப நல்லவர்! நம்பிக்கையானவரும் கூட நீ போய் குளிச்சு ரெடியாகு! நானும் வர்றேன்! இன்னிக்கு ரெண்டுல ஓன்னை பார்த்துடலாம்.

  காலை சுமார் பத்து மணி இருக்கும். கதிரவன் மும்முரமாக தனது கதிர் வீச்சு தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தான். மரத்தில் இலைகள் கூட அசையாமல் ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டிருக்க முதல் ஆளாய் மணி வந்து சேர்ந்தார்.
    வாங்க முதலியார்! இதோ ரெடி ஆகிய்ட்டோம்! உக்காருங்க டிபன் சாப்பிடறீங்களா?
    என்ன தம்பி விளையாடுறீங்களா? இப்ப மணி பத்து காலையில எட்டு மணிக்கே டிபன் ஆயிடுத்து! சீக்கிரம் கிளம்பினாத்தான் பாயை பிடிக்க முடியும் மதியம் 12 மணிக்கு மேல அவர் யாரையும் பார்க்க மாட்டார்.
    இதோ காரை எடுத்துகிட்டு கிளம்ப வேண்டியதுதான்! வினோத் வேகமாக சென்று காரின் கதவை திறந்து உள்ளே சென்று இக்னீசியனை ஆன் செய்தான். ஒரு முறை உறுமிய கார் நகர மறுத்தது. பலமாக ஆக்ஸிலேட்டரை கொடுக்க அலைபாய்ந்தது. வீல்கள் தரையில் இடித்தது.
     என்ன ஆயிற்று காருக்கு? கீழே இறங்கி பார்த்தான் காரின் நான்கு டயர்களிலும் சுத்தமாய் காற்று இல்லை!
  ச்சே! எப்படி இது! வந்ததிலிருந்து கவனிக்காமல் விட்டுவிட்டோமே? எப்படி ஒரே சமயத்தில் நான்கு டயரும் பஞ்சர் ஆகும்? கேள்விக்குறியுடன் நிமிர்ந்தான்.
  எதிரே ஒரு எக்காள சிரிப்புடன் நின்று கொண்டிருந்தாள் செல்வி!
என்ன வினோத்? டயர் பஞ்சரா? அப்ப ப்ரோகிராம் கேன்சலா என்றாள்
   இல்லேம்மா! வேற வண்டி வருது! இதோ வந்துடுத்து என்றார் மணி! இப்படி ஏதாவது நடக்குமுன்னு எனக்கு தெரியும்மா? அதான் ஒரு வாடகை வண்டியை வரச்சொல்லிட்டேன் என்றான் ராகவன்.
  அவர்களை முறைத்தபடி அந்த வாடகை காரினுள் ஏறினாள் செல்வி! கார் வேகமெடுத்து புறப்பட்டது. நத்தம் பஞ்செட்டி சாலையின் மேடு பள்ளங்களில் ஊர்ந்து பிரதான சாலையில் ஏறி வேகமெடுத்தது கார். முதலில் கோபப்பட்டாலும் பின்னர் சாந்தமுடன் எதுவும் பேசாது வந்தாள் செல்வி.
  தச்சூர் கூட்டு சாலை பிரிவில் திரும்பி பொன்னேரி செல்லும் சாலையில் திரும்பிய கார் ஒரு ஐந்து நிமிடத்தில் ஒரு மண் சாலையில் திரும்பியது. அந்த சாலை ஓரங்களில் பெரும்பாலும் குடிசை வீடுகள் நிறைந்திருக்க இறுதியில் ஒரு மசூதி. அந்த மசூதியின் முன் வந்து நின்றது கார்.
  ராகவன் முதலில் இறங்க பின்னால் வினோத் இறங்கி செல்வியை இறங்குமாறு கூறினான். முதலில் சிறிது தயங்கிய செல்வி பின்னர் வேகமாக இறங்கினாள். ஒரே மூச்சில் வேகமாக ஓடி மசூதிக்குள் மறைந்தாள்.
   இருவரும் திகைத்தபடி செல்வி! செல்வி ஏன் ஓடறே! நில்லு என்றனர்.அது எதையும் காதில் வாங்காமல் அந்த சிறிய மசூதியினுள் நுழைந்த செல்வி அங்கிருந்த ஒரு மவுல்வியின் முன் மண்டியிட்டாள்.
  அந்த மவுல்வி இது எதையும் கவனிக்காமல் கண்களை மூடி கையில் இருந்த பவழ மணிகளை உருட்டி ஜபம் செய்து கொண்டிருந்தார். பின்னாலேயே வந்த ராகவன் வினோத், மணி மூவரும் அப்படியே நிற்க மவுல்வி கண்ணை திறந்தார்.
    என்னம்மா ப்ரவீணா! வாம்மா!  என்றார் மவுல்வி கண்ணை திறந்து!
மூவரும் ஸ்தம்பித்து நின்றனர்.
                                         மிரட்டும்(14)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து பகிரலாமே! நன்றி!


   



Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!