"கை"விட்ட காங்கிரஸ்! நட்டாற்றில்தேமுதிக! கரையேர முடியாத கேப்டன்!

     "கை"விட்ட காங்கிரஸ்! நட்டாற்றில்தேமுதிக! கரையேர முடியாத கேப்டன்!


   ராஜ்யசபா சஸ்பென்ஸ் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது! எல்லோரும் நினைத்தது போல திமுகவிற்குத்தான் தன்னுடைய ஆதரவு என்று காங்கிரஸ் என்று கூறிவிட்டது. பாமக எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று சொன்னாலும் கூட்டணி பேரம் படியாததுதான் காரணம் என்று தகவல்கள் கசிகின்றன. கடைசி நேரத்தில் திமுகவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது. புதியதமிழகம், மமக போன்ற உதிரிக் கட்சிகள் ஆதரவுடன் ராஜ்யசபாவில் கனிமொழி அமரப் போவது உறுதியாகிவிட்டது.
     இப்போது பாவம் தேமுதிகவின் நிலை! கேப்டன் எதை நம்பி களத்தில் குதித்தார் என்றே தெரியவில்லை! சொந்த கட்சி எம்.எல்.ஏக்கள் ஏழுபேர் அம்மா விசுவாசிகளாக மாறியபின் மார்க்சிஸ்ட்கள் ஆதரவு இல்லை என்றான பின் எப்படி ஜெயிப்போம் என்று நினைத்தார் என்று புரியவில்லை! காங்கிரஸ் ஒருவேளை ஆதரித்து இருந்தாலும் இவரது நிலைமை கவலைக் குறியாகத்தான் இருந்தது. அதனால்தான் என்னமோ சுதிஷை களம் இறக்காமல் இளங்கோவனை இறக்கிவிட்டார்.
       இப்போது காங்கிரஸும் காலை வாரிவிட நட்டாற்றில் நிற்கிறார் கேப்டன். எப்போது எம்.எல்.ஏக்கள் அம்மா பாசம் காட்ட ஆரம்பித்துவிட்டார்களோ அப்போதே உஷாராக இருக்க வேண்டும் கேப்டன். சினிமாவும் அரசியலும் ஒன்று என்று நினைத்துவிட்டாரோ என்னமோ? அவரது பேச்சுக்களில் நிதானம் இல்லை! எம்.எல்.ஏக்கள், கட்சியினரை மதிப்பது இல்லை. சமீபத்தில் ஒரு கும்மிடி பூண்டி அருகே ஓர் இழவு வீட்டில் கூட தொண்டர்கள் மீது எரிந்து விழுந்துள்ளார். இது அரசியல் செய்வதற்கு நல்லது இல்லை.
      கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல அம்மா கட்சிக்கு போன எம்.எல்.ஏக்களுக்கு இப்போது கடிதம் எழுதியுள்ளார். நமது கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று! கட்சி மறந்து சென்றவர்களை இந்த கடிதம் ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை! அவர்கள் அம்மா கட்சிக்குத்தான் எங்கள் ஓட்டு என்று அறிவித்து விட்டனர். இதே கேப்டன் அன்று தனித்து போட்டி என்றார். பின்னர் கடவுளிடம் மட்டுமே கூட்டு என்றார். இறுதியில் திமுகவுடன் பேரம் படியாத நிலையில் யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ அவருடனேயே கூட்டணி வைத்தபோதே அவர் மீதான நம்பிக்கை குறைந்துபோய்விட்டது.
     அம்மாவுடன் கூட்டணி வைத்தால் பணிவுதான் முதல் அரிச்சுவடி! இது இவருக்கு சரிபட்டு வரவில்லை! முறித்துக் கொண்டார். நிறைய செலவு பண்ணி சம்பாதிக்க காத்திருந்த எம்.எல்.ஏக்கள் அம்மா பக்கம் சாய்ந்து காசு பார்க்க முடிவு செய்துவிட்டனர். ஆனால் பார்க்க முடியாது என்பது வேறுவிசயம். இந்த எம்.எல்.ஏக்கள் மாற்றுக் கட்சிக்கு சென்றனர் என்றபோதே விஜயகாந்த் அவர்களை எதிர்க்காமல் அரவணைத்து அவர்களின் குறை கேட்டு நடந்திருப்பாரேயானால் கட்சியாவது உடையாமல் இருந்திருக்கும். ஆனால் அவரது எடுத்தேன் கவிழ்த்தேன் தனமான அரசியலால் இன்று கட்சி உடைந்து சிதறிக் கிடக்கிறது.
     இருக்கும் சிலராவது வேறு கட்சிக்கு தாவாமல் இருக்க வேண்டுமானால் அவரது அணுகுமுறை மாறவேண்டியது அவசியம். சும்மா குறை பேசி கைதட்டல் பெறுவதை குறிக்கோளாக கொள்ளாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். மக்களோடு மக்களாக கை கோர்த்து மக்கள் பிரச்சனைகளை குறித்து அறிந்து போராடவேண்டும். அதை செய்யாமல் எம்.எல்.ஏக்களின் விசுவாசத்தை அறியவே ராஜ்யசபா தேர்தலில் போட்டி என்றால் என்ன அர்த்தம். ஏற்கனவே ஏழுபேர் போன நிலையில் இருப்பவர்களையும் சந்தேகப்படுவது போல அல்லவா இருக்கிறது பேச்சு. இந்த பேச்சு அவர்களை காயப்படுத்தாதா?
     இன்றைய நிலையில் இருக்கும் 22 எம்.எல்.ஏக்களாவது அவருக்கு விசுவாசமாக இருந்து ஓட்டு போடுவார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் விசுவாசத்தை அறியத்தான் தேர்தல் என்ற அவரது ஸ்டேட்மெண்ட் அறியாமைத்தனத்தை தான் காட்டுகிறது. இதையே எங்களின் ஒற்றுமையை காட்டவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்! கருத்து வேற்றுமைகளை மறந்து எங்கள் கட்சி உறுப்பினர்கள் எங்களுக்கே வாக்களிப்பார்கள்! திமுகவிற்கு ஓர் போட்டியாக நாங்கள் இருப்போம். என்று சொல்லியிருந்தார் என்றால் அவர்தான் கேப்டன்.
    ஆனால் தவறான ஸ்டேட்மெண்ட் விடுத்து இருப்பவர்களையும் காயப்படுத்திவிட்டு மற்றகட்சிகளையும் அரவணைக்க முடியாமல் ஒரு ஓட்டைக் கப்பலுக்கு கேப்டனாய் நட்டாற்றில் தவிக்கிறார் கேப்டன். இவர் கரையேறினால் அதிசயம்தான்!
   இன்றைய நிலையில் திமுகவின் பலம் முப்பத்தி இரண்டு  திமுக 23. புதியதமிழகம் 2 மமக 2 காங்கிரஸ் 5 பா.ம.கவும் ஆதரித்தால் 35 ஓட்டுகள் பெற்று கனிமொழி எம்.பி ஆகிவிடுவார். அப்படி ஆதரிக்காவிடினும் தேமுதிகவினைவிட கூடுதல் ஓட்டுகள் இருப்பதால் எம்.பி ஆகிவிடுவார்.
 தேமுதிகவின் பலம் 22. அதிருப்தி எம்.எல்.ஏ ஏழுபேர் வாக்களித்தாலும் 29 பேர்தான் வருகிறது. காங்கிரஸ் ஓட்டு கிடைத்தால் ஏதாவது அதிசயம் நிகழ்ந்திருக்கும்.. இதனால் தேமுதிகவின் தோல்வி உறுதியாகிவிட்டது.
  இப்போது தேமுதிகவை காங்கிரஸ் ஆதரித்தால் பலன் ஒன்றும் கிடையாது. தமிழகத்தில் திமுகவே தேமுதிகவைவிட செல்வாக்கு பெற்ற கட்சி. திமுகவிற்கு தற்போது லோக்சபாவில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். தேமுதிகவிற்கு ஒன்றும் கிடையாது இதையெல்லாம் யோசித்தே காங்கிரஸ் தேமுதிகவை கை கழுவி நட்டாற்றில் விட்டுவிட்டது. கரையேரமுடியாத கேப்டனாகிவிட்டார் விஜயகாந்த்.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. /// தவறான ஸ்டேட்மெண்ட் விடுத்து இருப்பவர்களையும் காயப்படுத்திவிட்டு... ///

    சரியாச் சொன்னீங்க...

    ReplyDelete
  2. தன்னைக் குறித்து அதிகமாக
    கற்பனை செய்து கொண்டதால் வந்த விளைவு
    அருமையான அலசல்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!