விக்கிரமாதித்தன் கொண்டுவந்த நாகரத்தினம்!

விக்கிரமாதித்தன் கொண்டுவந்த நாகரத்தினம்!

முதல் பகுதியை படிக்க: விக்கிரமாதித்தனை பிடித்த சனி!

மதுராபுரி மன்னன் மதுரேந்திரன் தான் வைத்த சோதனையில் விக்கிரமாதித்தன் வென்றுவிட்டதை நினைத்து வருத்தம் கொண்டான். விக்கிரமாதித்தனை கொல்ல வேறு உபாயம் கூறுமாறு மந்திரியிடம் கேட்டான்.
   மதுரேந்திரனின் மதியூக மந்திரி சிறிது நேரம் யோசித்தான். பிறகு, இன்னும் ஒரு உபாயம் உள்ளது. ஏழுகடல்களுக்கு அப்பால் நாகலோகம் எனும் தீவு உள்ளது. அந்தத் தீவில் நாகபுரம் என்ற பட்டினத்தை அரசாளும் நாகேந்திரனின் குமாரியான நாக கன்னிகை சிரித்தால் நாகரத்தினம் உதிரும். அந்த ரத்தின மணியை கொண்டுவருமாறு ஆதித்தனை அனுப்புவோம். ஏழுகடல்களை அவனால் தாண்ட முடியாது. அப்படியே தாண்டிச்சென்றாலும் நாகபுரத்தில் உள்ள விஷம் அவனை கொன்றுவிடும் என்றான்.
   மந்திரியின் யோசனையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்த மதுரேந்திரன் அரசவைக்கு ஆதித்தனை அழைத்து, ஆதித்தா! முத்தைக்காட்டிலும் சத்துள்ள பொருள் ஒன்று வேண்டும். மகரகண்டிகை செய்ய வேண்டியிருப்பதால் அதன் நடுவில் வைக்க நாகபுரத்தில் உள்ள நாகரத்தினத்தைக் கொண்டுவா! அது அங்குள்ள நாக கன்னிகை சிரித்தால்தான் உதிரும்! என்றான்.
   ஆதித்தனும் அறுபது நாட்கள் அவகாசமும் அறுபதினாயிரம் பொன் சம்பளமும் இரத்தினத்தின் விலை இரண்டுலட்சம் பொன்னும் கேட்டு பெற்றுக்கொண்டு தன் மாளிகை வந்து சேர்ந்தான். அங்கு அனந்தன், சலந்திரன், இரத்தினமாலை, முத்துநகை, அனைவரையும் அழைத்து, அரசன் ஏதோ சூழ்ச்சி செய்கிறான்! என்று அரசன் சொன்ன கட்டளையைக் கூறினான்.அப்புறம் நான் எப்படி ஏழு கடலை கடப்பேன்? என்றும் வினவினான்.
    அதைக்கேட்ட சலந்திரன் என்னும் தவளை நானிருக்க பயம் ஏன்?நீங்கள் கடலோரம் சென்று என்னை நினைத்தால் நான் வந்து பெரும் வடிவம் எடுத்து உங்களை சுமந்துசென்று நாகபுரத்தில் விடுவேன்.பின்னர் அனந்தனை நினைத்தால் அவன் அங்குவந்து தேவையான உதவிகளைச் செய்வான். என்றான்.
     இரத்தினமாலை! நான் வரும் வரையில் முத்துநகையை எப்படி பாதுகாப்பது என்று வினவினான் ஆதித்தன். உடனே இரத்தினமாலை செம்பில் தண்ணீர் எடுத்து முத்துநகை மீது தெளிக்க முத்துநகை மரப்பாச்சி பாவையானாள். அதை எடுத்து மூலையில் சார்த்திவைத்தாள் இரத்தினமாலை. மகிழ்ந்த விக்கிரமாதித்தன், பெண்ணே! இன்றிலிருந்து அறுபதாவது நாளில் திரும்பி வருவேன்! அன்று முத்துநகையை பெண்ணாக மாற்றிவைத்திரு! என்று கூறி விடைபெற்றுச் சென்றான்.

     சலந்திரன் என்னும் தவளையின் முதுகில் ஏறி ஏழு கடல்களை கடந்து நாகத்தீவின் எல்லையில் உள்ள அச்சுதநகரி என்னும் இடத்திற்கு வந்தான் விக்கிரமாதித்தன். அவ்வூரில் அவன் நடமாடிக்கொண்டு இருக்கையில் ஒரு வீட்டில் முதியவள் ஒருவள் அழுது கொண்டிருந்தாள். விக்கிரமாதித்தன் அவள் வீட்டிற்கு சென்று என்ன விஷயம்? எதற்கு அழுகிறீர்கள் என்று விசாரித்தான். அந்த முதியவள், இந்த நகரை அரசாளும் அச்சுதவேந்தனுக்கு நான்கு புத்திரிகள் அவர்களில் மூத்தவளான அச்சுதமடந்தைக்கு தினமும் திருமணம் நடப்பதும் அன்றிரவே அந்த மாப்பிள்ளை இறப்பதுமாக இருந்துவருகிறது. அதற்காக நகரில் உள்ள ஆண் மகனையெல்லாம் தினம் ஒருவராக திருமணம் செய்து வைக்கிறான் அரசன். இன்று என் மகனின் முறை! ஒரே மகனை இழக்கப்போகிறோமே என்று அழுகிறேன்! என்றாள்.
        தாயே! என்னை உன் மகனாக பாவித்து என்னையே சேவகர்களுடன் அனுப்பிவிடு! உன் மகனை அனுப்பவேண்டாம் என்றான் விக்கிரமாதித்தன். அந்த முதியவளோ, உன்னைக் கொன்ற பாவம் எனக்கு வந்து சேருமே? என்றாள். நானாக வலிய வந்துதானே செல்கிறேன்! நீ ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லை அல்லவா? இதனால் பாபம் ஒன்றும் வராது என்று பலவாறு அவளை சமாதானப்படுத்தி எனக்கு சாப்பாடு மட்டும் போடு! பசிக்கிறது! உன் மகனுக்கு பதில் நான் மணமகனாகச் செல்கிறேன்! அவனைப்போல் என்னை அலங்கரித்துவிடு! என்றான் விக்கிரமாதித்தன்.
        அந்த முதியவளும் அதற்கு ஒத்துக்கொண்டு, அவனுக்கு உணவிட்டு அலங்கரித்து சேவகர்களுடன் அனுப்பிவிட்டாள். விக்கிரமாதித்தனும் சேவகர்களுடன் சென்று மணவறையை அடைந்து அச்சுதமடந்தையை மணந்துகொண்டான். அன்றிரவு அச்சுத மடந்தையுடன் சிறிது நேரம் சதுரங்கம் விளையாடிக்கொண்டு இருக்கும் போது அவள் தனக்கு தூக்கம் வருகிறது என்று தூங்கிவிட்டாள். உடனே விக்கிரமாதித்தன் வேதாளத்தை அழைத்து இந்த பெண் இவ்வளவு சீக்கிரம் உறங்க காரணம் என்ன? என்று கேட்டான். 
   அரசே! நாம் நாடிச் செல்லும் நாக புரத்து நாகேந்திரனின் குமாரன் ஆதிசேடன் என்பவன் தினம் தோறும் இந்த பள்ளியறைக்குவந்து இந்த பெண்ணுக்கு மயக்கம் உண்டாக்கி பாம்பு உருவம் எடுத்து மாப்பிள்ளையை கொன்றுவிட்டு சென்றுவிடுகிறான். இந்த நகரத்து பிள்ளையார் கோவிலில் இருந்து நிலவறை வழியாக அவன் இங்கு வருகிறான். அவன் நிலவறைக் கதவை தள்ளிவிட்டு வரும்போதே இவள் மயக்கம் ஆகிவிடுவாள். பின் அவன் மாப்பிள்ளையை கொன்றுவிடுவான். இப்போது நான் அச்சுத மடந்தை அருகில் படுத்துக்கொள்கிறேன்.அவன் என்னைக்கடித்தாலும் விஷம் என்னை ஒன்றும் செய்யாது நீங்கள் அச்சமயம் மறைந்திருந்து மந்திரவாளால் அவன் வாலின் நுனியை மட்டும் வெட்டிவிடுங்கள். நம் விஷயம் தெரிந்துவிட்டது என்று அவன் ஓடிவிடுவான். அவனை கொல்லவேண்டாம், நாம் தேடிச்செல்லும் நாககன்னிகை அவனுடைய தங்கை! என்றது வேதாளம்.

      விக்கிரமாதித்தன் அவ்வாறே ஒளிந்திருந்து ஆதிசேடனின் வாலை வெட்டிவிட அவன் ஓடிவிட்டான். பின்னர் மறுநாள் விக்கிரமாதித்தன் உயிருடன் வரவும் அச்சுதராஜன் மகிழ்ந்து விக்கிரமாதித்தன் தான் தன் மாப்பிள்ளை என்றதும் மிகவும் பெருமை அடைந்தான். சில நாள் அங்கு தங்கிய விக்கிரமன் பின்னர் அனந்தனை அழைத்தான். அனந்தா! நாகலோகத்திற்கு எப்படி செல்வது? வழி முழுவதும் விஷம் இருக்கிறதாமே? என்று வினவினான்.
   அனந்தனும் மனித உருவில் யாரும் நாக லோகம் போகமுடியாது! நான் முதலில் சென்று நாக கன்னிகையை தங்களுக்கு பெண் கேட்கிறேன்! நீங்கள் அங்கு வர வழிசெய்கிறேன்! என்று நாகலோகம் புறப்பட்டான்.
   அனந்தன் சென்று நாகேந்திரனை சந்தித்து அங்கு விக்கிரமாதித்தனின் வீர பிரதாபங்களை தெரிவித்து நாக கன்னிகையை அவருக்கு பெண் தரவேண்டும். விக்கிரமாதித்தன் இங்கு வர வழிவகை செய்ய வேண்டும் என்று வேண்டினான்.
      நாகேந்திரனும் விக்கிரமாதித்தனுக்கு பெண் கொடுக்க சம்மதித்து நாகங்களை அனுப்பி விஷங்களை உறிஞ்சி எடுத்துவிட விக்கிரமாதித்தன் நாகலோகம் வந்தடைந்தான். நாக கன்னிகையை சந்தித்து அவளை மணந்து கொண்டான். விக்கிரமனை மணந்து கொண்ட மகிழ்ச்சியில் நாக கன்னிகை ஒரு நாள் சிரிக்க அவளது வாயில் இருந்து நாகரத்தினங்கள் விழுந்தன. விக்கிரமன் அவற்றை எடுத்து பத்திரப்படுத்திக் கொண்டான். சிறிது நாளில் நாக கன்னிகையை அழைத்துக் கொண்டு அச்சுதபுரிக்கு வந்து அச்சுதமடந்தையையும  அழைத்துக்கொண்டு மீண்டும் சலந்திரன் உதவியோடு மதுராபுரி வந்து சேர்ந்தான்.

      மாளிகையில் இரத்தினமாலையும் முத்துநகையும் இவர்களை வரவேற்றார்கள். மறுநாள் அரசவைக்கு சென்று நாகரத்தினங்களை  அரசனிடம் கொடுத்தான். விக்கிரமாதித்தன் திரும்ப மாட்டான். இரத்தினமாலையை அடையலாம் என்று நினைத்த மதுராபுரி மன்னனின் ஆசையில் மண் விழுந்தது. இவனை எப்படி அழிப்பது? அதற்கு வழி என்ன என்று மீண்டும் மந்திரியிடம் கேட்டான் மதுரேந்திரன்.
                                       தொடரும்.
மேலும் தொடர்புடைய பதிவுகள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. சிறுவனாய் மாறி ரசித்தேன்,தொடரவும்
    உங்கள் மின்னஞ்சல் தெரிவிக்கவும். உங்கள் வலைப் பக்கத்திற்கு மேலுள்ள இரண்டு படங்களை இணைத்து ஒரு முகப்பு படம் உருவாக்கி இருக்கிறேன். அதை அனுப்புகிறேன். பிடித்திருந்தால் உங்கள் வலை முகப்பு படமாக வைத்துக் கொள்ளவும். எனது மின்னஞ்சல்
    tnmdharanaeeo@gmail.com

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!