பிச்சைக்காரனுக்கு வைத்துவை!

பிச்சைக்காரனுக்கு வைத்துவை!

இரவு நேரம். வேலைகளை முடித்துக்கொண்டு களைப்பாக திரும்பிய தன்னுடைய மகன்களுக்கு சாதம் பறிமாறிக்கொண்டிருந்தாள் அம்மா. அன்று அவள் செய்த உணவு புளியோதரை! மிகவும் ருசியாக இருந்தது. வேர்க்கடலைகளை வேறு தூவி வைத்து இருந்ததால் சுவைக்கு பஞ்சம் இல்லை!. உணவின் சுவையில் மயங்கிய மகன்கள் அம்மா! புளியோதரை கெட்டுப்போகாது அல்லவா? நாளைக்கும் வைத்துவை! நான் சாப்பிடுகிறேன்! என்றான்.
    அதைக்கேட்ட தாய் சிரித்தாள்.
நான் என்னம்மா தவறாக சொல்லிவிட்டேன்! ஏன் சிரிக்கிறாய் அம்மா! என்றான் மகன். மகனே நீ சொன்னது போல சொல்லக்கூடாது. பிச்சைக்காரனுக்கு வைத்து வை என்றுதான் சொல்ல வேண்டும். என்றாள் அம்மா.
  பிச்சைக்காரனுக்கு வைத்துவிட்டால் அப்புறம் நான் எப்படி சாப்பிடுவதாம்? எனக்கு மிஞ்சியதுதான் பிச்சைக்காரனுக்கு! இதைத்தானே பெரியவர்களும் தனக்கு மிஞ்சியது தானம் என்று சொல்கிறார்கள். இப்போது தாய் மேலும் சிரித்தாள்.
   என்னம்மா! எதற்கெடுத்தாலும் சிரித்துக் கொள்கிறாய்? என்று சலித்துக் கொண்டான் மகன்.
   மகனே! உன் புளியோதரை ஆசையை நினைத்து முதலில் சிரித்தேன்! இப்போது நீ பழமொழியை தவறாக புரிந்துகொண்டதை நினைத்து சிரித்தேன்! என்றாள் தாய்.
  பழமொழி தவறா அம்மா?
பழமொழி தவறில்லை! நீ புரிந்துகொண்டதுதான் தவறு. தனக்கு மிஞ்சியது தானம் என்றால் நாம் சாப்பிட்டு மிச்சம் இருப்பது இல்லை! தன்னிடம் தேவைக்கு அதிகமாக உள்ளவற்றை தானம் செய்ய வேண்டும் என்பது பொருள். மிஞ்சியது என்பதை மிகுதியானது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது தன்னுடைய தேவைக்கு அதிகமானது என்று பொருள். என்றாள்.
   சரி அம்மா! புரிந்தது. ஆனால் பிச்சைக்காரனுக்கு ஏன் எடுத்து வைக்க வேண்டும்?

  அது ஒரு கதை!
 சொல்லேன் அம்மா!
  ஒரு ஊரில் ஒருவன் இருந்தான் அவனுக்கு மோர்க்குழம்பு என்றால் கொள்ளை ஆசை தினமும் மோர்க்குழம்பு வைக்கச்சொல்லி சாப்பிடுவான். ஒவ்வொரு நாள் அவன் சாப்பிடும்போதும் நாளைக்கும் இதே போல மோர்க்குழம்பு செய்து வை என்பான். இப்படியே பல நாட்கள் சென்றன.
  இப்படி  ஒருநாள் அவன் மனைவியிடம் சொன்னபோது எங்கிருந்தோ கலகலவென சிரிப்பொலி கேட்டது. அவன் சுற்றும் முற்றும் தேடிப்பார்த்தான். யாரும் தென்படவில்லை. எங்கிருந்து சிரிப்பொலி வருகிறது என்று தெரியாமல் திகைத்தனர். ஆனால் ஆள் அகப்படவே இல்லை! அன்றிரவே அவன் பாம்பு கடித்து இறந்து போனான். எல்லோரும் பாம்பை பிடித்து அடிக்க போனார்கள். அப்போது அந்த பாம்பு மனிதனாக மாறியது. நான் எமதூதன்! இவன் உயிரை கொண்டு செல்ல வந்தேன்!. ஆனால் இவனோ நாளைக்கு நான் சாப்பிட மோர்க்குழம்பு செய்து வை! என்றான். இன்றிரவே இறக்கப்போகும் இவன் நாளைக்கு சாப்பிடுவதைப் பற்றி பேசுகிறானே என்று நினைத்து சிரித்தேன்! என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டான்.
  இதைக்கேட்டு அனைவரும் வியந்து நின்றார்கள். நாளை என்பது நிச்சயம் அல்ல! தூங்குகிறோம் எழுந்திருப்போம் என்பது உறுதியல்ல!  எமன் நாளை வரை நமக்கு உயிர்தந்தால் நாம் சாப்பிடலாம்! அந்த பொருளில் தான் பிச்சைக்காரனுக்கு எடுத்து வை என்கிறார்கள் என்றாள்.
  நல்ல கதைதான் அம்மா! ஆனால் புளியோதரையின் சுவை என்னை கட்டிப்போட்டுவிட்டது! பிச்சைக்காரனுக்கு எடுத்துவையுங்கள்! அவன் பிச்சை போட்டால் நான் சாப்பிடுகிறேன் என்றான் மகன்.

(எங்கோ எப்போ படித்ததை தழுவி எழுதினேன்)


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!