ஒரேஒரு மார்க்கு!

ஒரேஒரு மார்க்கு!


   அந்த மேனிலைப்பள்ளியின் பன்னிரண்டாம் வகுப்பு ஏ பிரிவில் இயற்பியல் பாடம் எடுத்துக்கொண்டிருந்தார் பரந்தாமன். வயது சுமார் ஐம்பதை நெருங்கிக்கொண்டிருந்தது. ஒடிசலான தேகத்தை அந்த காலத்து பேகி பேண்ட்டும் முழுக்கைச்சட்டையும் தாங்கிக் கொண்டிருக்க விழுந்து விடுமோ என்ற நிலையில் மூக்கில் தொங்கிக்கொண்டிருந்தது மூக்குக் கண்ணாடி. ஏறியிருந்த முன் நெற்றியில் வியர்வை பெருக்கோட ஓடாத மின்விசிறியை சபித்துக் கொண்டிருக்க அந்த மாணவன் எழுந்தான்.
   தயங்கி தயங்கி, “சார்…!” என்றான்
    “என்னலே!”
அந்த மாணவன் மென்று விழுங்கி, மீண்டும் “சார்” என்றான்.
    “நான் சாருத்தான் தெரியும்லே! ஒனக்கு என்ன வேணும்? சொல்லித் தொலைலே! டைம் வேஸ்ட் ஆவுது!” ஓயாத அலுவலகப்பணிகள் காரணமாக போர்ஷணை முடிக்க முடியாத கடுப்பில் சிடுசிடுத்தார் பரந்தாமன்.
    அவரது சிடுசிடுப்பில் பயந்து போய் பம்மிய அந்த மாணவன் மீண்டும் சார்!.. என்று இழுத்தான்.
    “ஏலே வெங்காய மூதி! நான் சொல்றது ஒனக்கு ஒறைக்கவேயில்லையாலே! சீக்கிரம் விசயத்தை சட்டுபுட்டுன்னு சொல்லு! எனக்கு நேரம் ஆவுது!” பரந்தாமன் கத்தவும். அந்த மாணவன் கையில் ஒரு பேப்பருடன் வந்தான்.
      “சார் இதை பாருங்க!”
   என்னலே இதுக்கு? அரையாண்டு பிசிக்ஸ் பேப்பர் உன்னோடது? இதுக்கு என்னலே இப்போ?
       “இல்லே சார்!”
    “என்னலே! இல்லே! நொள்ளேன்னுட்டு! சட்டுன்னு விவரத்த சொல்லி தொலைடே!”
     “சார்! எனக்கு ஒரு மார்க்கு நீங்க போட்டீங்கன்னா பாஸாயிருவேன்! மத்த எல்லா சப்ஜெக்ட்லேயும் பாஸ்! ஒரேயொரு மார்க்கு சார்!”
   அவன் சொல்லி முடிக்கும் முன்னரே எகிறி குதித்தார் பரந்தாமன்.  “அதெல்லாம் முடியாதுலே! எதுக்குலே பிச்சை எடுக்கிறே? சொந்தமா எழுதி வாங்கு! இந்த ஒரு மார்க்கு அரை மார்க்குன்னு என்கிட்ட வர வேலை வெச்சுக்காதே!”
     “இல்ல சார்! ஒரே மார்க்குதான் சார்! நீங்க போட்டா ரேங்க் வந்துருவேன்! வீட்டுலயும் அடிக்க மாட்டாங்க! ப்ளீஸ் சார்! ஒரு மார்க்கு சார்!” அவன் கெஞ்சவும் அவன் கன்னத்தில் விசிறிவிட்டார் பரந்தாமன்.
        “என்ன மாட்டி விடவே வந்தியாலே! என்னை பத்தி தெரியுமாலே? மார்க்க தவிர என்னவேனா கேளுவே! ஆனா மார்க்கு மசுருன்னு மட்டும் வந்து நிக்காதலே! போ! மருவாதையா போயி ஜோலியை பாரு!” ஆவேசத்துடன் அவர் கத்தி முடிக்க மாணவன் ஒன்றும் பேச முடியாமல் கன்னத்தை தடவியபடி அப்படியே அமர்ந்து விட்டான்.
   அப்படி என்னத்தான் நடந்து விட்டது! ஒரே ஒரு மார்க்தானே! போட்டால் என்ன? பாவம் ரேங்க் எடுத்துவிட்டு போகட்டும் என்று நீங்கள் பரிதாபப் படுவீர்கள்! ஆனால் பரந்தாமன் ஏன் இவ்வளவு உறுதியாக இருக்கிறார். அதற்கு ஒரு கொசுவர்த்தி சுருளை புகைய விட வேண்டும்.
      அன்றொரு நாள் பிளஸ் ஒன் மாணவர்களுக்கு வெக்டர்களின் இணைகர விதியை  நடத்திக் கொண்டிருந்தார் பரந்தாமன். வாசலில் நிழலாடவே திரும்பினார்.
   பியுன் நின்றிருக்கவே, என்னப்பா முனுசாமி! என்ன விசயம்? என்றார்.
    “எச்.எம் உங்களை ரூமூக்கு வரச்சொன்னாருங்கய்யா!”
   “என்னலே! என்ன ஆகிப் போச்சாம்? சுனாமி கினாமி ஏதாவது வந்து தாக்குதாமா நம்ம பள்ளிக்கோடத்தை! தாக்கீது அனுப்பிட்டாரு! பத்து நிமிசத்துல வரேன்னு சொல்லுலே!” என்றார்.
    பியுன் அகன்றதும் மீதிப்பாடத்தை முடித்தார்.பாடவேளை முடியவும் எச். எம் கூப்பிட்டது நினைவுக்கு வரவே அவரது ரூமுக்குள் நுழைந்தார். பரந்தாமன்.
    “வாய்யா! பரந்தாமா! சாவகாசமா வந்து நிக்கீறு! ஒனக்கு ஓலை வந்துருக்கு! உன்னால எம்பேரும் சேந்து கெட்டுப்போயிருக்கு! நீர் என்னடான்னா எருமை மாட்டுமேல மழை பேஞ்சா மாதிரி நிதானமா வந்து நிக்கறீர்! இந்தாரும்! இதை பிடியுங்க!” என்றார் எச். எம்.
    ரிடையர் ஆக சிலவருடங்களே அவருக்கு பாக்கி. செம டென்ஷன் பார்ட்டி! நெற்றியில் சூர்ணம் வியர்வையில் கலைந்து கொண்டிருந்தது. தீவிர விஷ்ணு பக்தர். பாரியான சரீரம். இதை சொல்லி முடிக்கும் போது மூச்சு வாங்கியது. கைக்குட்டையால் முகத்தை துடைத்துக் கொண்டார்.
     “என்ன சார் ஆகிப்போச்சு இப்ப? இந்த குதி குதிக்கிறீர்!”
    “ லெட்டரை படியும்யா? நீரே குதிப்பீர்!”
  லெட்டரை படித்த  பரந்தாமன் அதிர்ந்து போனார். அது ஒரு மெமோ. டி.பி. ஐ யிலிருந்து வந்து இருந்தது. வரும் திங்களன்று விசாரணைக்கு வருமாறு சொல்லியிருந்தது. பரந்தாமன் இத்தனை வருட சர்வீசில் இதுவரை ஒரு மெமோ, கெட்டபெயர் எதுவும் வாங்கியது இல்லை. முதல் முதலாய் இப்போது மெமோ. அவரது சர்வீஸில் ஒரு கரும்புள்ளி.
   அப்படி என்ன தவறு செய்துவிட்டார் அவர். பெரியதாய் ஒன்றுமில்லைதான். இந்த வருடம் பேப்பர் திருத்தும் போது ஒரு தறுதலைக்கு ஒன்றிரண்டு மார்க்கை அள்ளி வீசிவிட்டார். அப்பன் வீட்டு சொத்தா என்ன? பாவம் பிழைத்துப் போகட்டும் என்று கொஞ்சம் மனம் இரங்கிவிட்டார். அதனால் வந்த வினைதான் இது. விசாரணைக்கு அழைத்துவிட்டார்கள்.
   ப்ளஸ் டூ விடை தாள் திருத்துகையில் அந்த பேப்பரில் அப்படி ஒன்றும் இல்லை மதிப்பெண் போட அப்படி இப்படி ஒன்றிரண்டாய் போட முப்பத்தெட்டு வந்துவிட்டது. இன்னும் இரண்டு மதிப்பெண் போட்டால் பாஸ். பாவம் இரண்டு மதிப்பெண் ஒரு பையனின் வாழ்க்கையை வீணடித்துவிடுமே! போனால் போகட்டும் என்றும் ஆங்காங்கே அரைமதிப்பெண்கள் வீசி நாற்பது வழங்கி விட்டார். சரியாக நாற்பது என்றால் சந்தேகம் வருமே என்று இன்னும் இரண்டு கூட்டி போட்டுவிட்டார். அங்குதான் ஆரம்பித்தது வினை. பெயிலாக வேண்டியவன் பாஸ் ஆனோமே என்று அந்த மூதேவி சும்மா இருந்ததா?
   பெரிசாய் நான் அதிக மார்க் எடுப்பேனாக்கும் என்று வரிந்து கட்டி மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துவிட்டது. குட்டு வெளிப்பட்டுவிட்டது. பரந்தாமன் பேப்பர் திருத்தியது சரியில்லை என்று கண்டுபிடித்து விசாரணைக்கு அழைத்துவிட்டார்கள்.
   “வாய்யா! வா! எவ்வளவு வாங்கிட்டு அந்த பையனுக்கு பாஸ் மார்க்கு போட்டே?”
   பேந்த பேந்த விழித்தார் பரந்தாமன்.
  முகத்தில் வியர்வை பெருக்கெடுக்க, சார்! நான் அந்த மாதிரி  “இல்லேங்க! ஏதோ தவறு நடந்து போச்சுங்க…” மென்று விழுங்கினார்.
     “இன்னாயா இவ்ளோ கூலா சொல்றே? ஏதோ தவறு நடந்து போச்சுன்னு!”
    பரந்தாமனால் பதில் பேச முடியவில்லை!
   “சரி! பணம் வாங்கலை! அவன் உனக்கு மாமன் பையனா? இல்லே தூரத்து சொந்தமா?”
    “அதெல்லாம் இல்லீங்க! ஏதோ பரிதாபப்பட்டு…”
   “எதுலேயா பரிதாபம்?”
     “தப்புதாங்க! பையனோட எதிர்காலத்தை பார்த்து…”
    “இப்ப உன் எதிர்காலமே பாதிக்க போவுதேய்யா…”
பரந்தாமன் அந்த அதிகாரியின் காலிலேயே விழுந்துவிட்டார். சார்! நான் தப்பு பண்ணலே சார்! ஏதோ ரெண்டு மார்க் போட்டா பாஸாயிடுவான் ஒரு குடும்பம் பொழைச்சிக்கும்னு இரக்கத்துலே போட்டுட்டேன் சார்! இனிமே இந்த மாதிரி நடக்காது சார்! இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிருங்க சார்!  பலதடவை சார் போட்டு கெஞ்சவும் அந்த அதிகாரிக்கு சங்கடமாக போயிருக்க வேண்டும்.
   “யோவ் வாத்தி! எழுந்திருய்யா முதல்ல!”
   “அந்த பையன் பாஸாகனும்னு நீ மார்க்கு போட்டே! ஆனா அவன் உனக்கே ஒலை வெச்சுட்டான் பாரு! சரி சரி! நான் பார்த்துக்கறேன்! கையில எவ்ளோ வெச்சிருக்கே கொடுத்திட்டு போ! இனிமேவாவது கவனமா இரு. இல்லே உன் மேல ப்ளாக் மார்க் விழுந்திரும்!”
   பையில் இருந்த பணத்தை கொடுத்துவிட்டு  “இனிமே கவனமா நடந்துக்கிறேன் சார்” என்று தளர்வாய் வந்தவர்தான் ஆளே மாறிவிட்டார். மார்க் என்றாலே டென்சன் எகிறிவிடும் அவருக்கு.
  அதன் பின் அவர் கிரேஸ் மார்க் போடுவார் என்று எதிர்ப்பார்ப்பது என்ன நியாயம்!
   மார்க்கு போட்டுவிட்ட பாவத்திற்கு ப்ளாக் மார்க் வாங்க அவர் என்ன இளிச்சவாயரா என்ன?
   பாவம் இந்த விசயம் தெரியாமல்தான் அந்த பையன் வாங்கிக் கட்டிக்கொண்டுவிட்டான். உங்களுக்கு தெரிஞ்சிருச்சு இல்லே! இனிமே யாரும் மார்க்கு கேட்பீங்க.. அவருகிட்ட?

(எனக்கு தெரிந்த ஆசிரியர் ஒருவருக்கு நேர்ந்த அனுபவம் கதையாக்கப்பட்டுள்ளது)


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. "சரி சரி கையில எவ்வளவு வச்சிருக்கீர்"

    சுரேஷ் அருமை, உங்களுடைய டச்.................

    ReplyDelete
  2. இது உண்மையான அனுபவமா!!!!.
    கதை ரொம்ப நல்ல இருக்கு.

    ReplyDelete
  3. அதானே... யாரும் கேட்கவே மாட்டார்கள்...

    ReplyDelete
  4. இரக்கபடுவதையும் சந்தேகப் படும் பொல்லாத உலகம் இது !

    ReplyDelete
  5. இப்படியும் அனுபவங்கள்.... பாவம் இப்படிப்பட்ட ஆசிரியர்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!