சிவனருள் கிடைக்கச்செய்யும் சோமவாரவிரதம்!

சிவனருள் கிடைக்கச்செய்யும் சோமவாரவிரதம்!


இந்து மதத்தில் எண்ணற்ற விரதங்கள். விரதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நற்பலன்களை தரவல்லது. விரதம் என்றாலே கட்டுப்பாடு என்று பொருள். மனதினை ஒருநிலைப்படுத்தி உணவுக்கட்டுப்பாட்டுடன் இறைவனை மனதில் நிறுத்தி வழிபடுவதுதான் விரதம்.
   ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விரதங்கள் உண்டு. இதில் சிவனை வழிபடும் கார்த்திகை சோமவார விரதம் மிகவும் உத்தமமானது. கார்த்திகை மாதம் சிவனுக்கு உகந்தது. சிவன் அக்னிப்பிழம்பாக இருப்பவர். இந்த கார்த்திகையும் அக்னியில் தோன்றியது. இந்தமாதத்தில் வரும் சோமவாரமான திங்கட் கிழமைகளில் விரதம் இருந்து சிவனை வழிபடுவது சிறப்பாகும்.
    சோமன் என்றால் சந்திரன். சோமனை தலையில் சூடிய சிவன் சோமசுந்தரர் என்று வழங்கப்படுகிறார். திங்கள் என்று தமிழிலும் சந்திரன், சோமன் என்று சம்ஸ்கிருதத்திலும் வழங்கப்படும் நிலா சிறப்பிக்கப்படும் விரதம் இது.
    தன்னுடைய நட்சத்திர மனைவியரில் ரோகிணியிடம் மட்டும் அதிக பாசம் செலுத்திய சந்திரன் தட்சனால் சபிக்கப்பட்ட சந்திரன் க்‌ஷய ரோகத்தால் உடல் நலிவுற்றான். பின் இந்த சோமவார விரதத்தினை கடைபிடித்து மேன்மை பெற்றதோடு சிவனின் மகுடத்திலும் இடம்பிடித்தான்.

   சந்திரனின் துன்பம் நீங்க அவனது மனைவி ரோகிணியும் இந்தவிரதத்தை கடைபிடித்தாள். அதனால் பெண்கள் சகல சௌபாக்கியத்துடன் திகழவும் கணவனுக்கு மேன்மைகள் கிடைக்கவும் நோய்நொடிகள் இன்றி தீர்காயுளுடன் வாழவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர்.

    கார்த்திகை சோமவார தினங்களில் சிவாலயங்களில் சங்கினால் சங்காபிஷேகம் நடைபெறும். நூற்றி எட்டு, ஆயிரத்து எட்டு சங்குகளால் சிவனின் ஐந்து முகங்களுக்கும் ஆவரண பூஜைகள் ஹோம ஜபங்கள் செய்து சங்கில் உள்ள வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்ட நீரை அபிஷேகித்து அர்ச்சனை செய்வர். இந்த சங்காபிஷேகம் மூலமாக அக்னிப்பிழம்பாக உள்ள ஈஸ்வரனை குளிர்விப்பதாக ஐதீகம்.
     இந்த சங்காபிஷேகத்தை கண்டு களிப்பதுடன் சிவனுக்கு வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி வெண்மை நிற பூக்களால் அர்ச்சித்து வழிபடுவதோடு ஆலயங்களில் உள்ள சந்திரசேகரர் என்ற மூர்த்தியை தரிசித்தால் ஆயுள் விருத்தியடையும்.

 .ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்டார். அதற்கு சிவன், காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக சிவபூஜை தினமும் செய்யும் ஒரு வேதியரையும் அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவ-பார்வதியாக நினைத்து, அவர்களுக்கு முடிந்தவரை தானம் செய்ய வேண்டும். அதன் பின் பகல் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து முன் இரவில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி சிவ சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டும். வீட்டிலேயே விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோயிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வேதியர்களுக்கும், அடியவர்களுக்கும் அன்னதானம் செய்யவும். இந்த சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள். அவர்களுக்கு என்னிடத்தில் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறுகிறார். 


 கணவனும், மனைவியும் ஒற்றுமையுடன் வாழவும், தீர்க்காயுளுடன் வாழவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். இந்நாளில் தம்பதி சமேதராக சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வர வேண்டும். வாழ்வில் தவறு செய்யாத மனிதர்களே இல்லை. இதற்காக மனம் வருந்துவோர் இந்த விரதத்தை அனுஷ்டித்து, இனி அவ்வாறு தவறு செய்யாமல் இருக்க உறுதி எடுத்தால், அவர்களது பாவங்கள் களையப்படும் என்பது நம்பிக்கை. 

பதவி உயர்வுக்காகவும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம்.சங்கு லட்சுமி கடாட்சமுடையது. எனவே, இந்நாளில், செல்வ அபிவிருத்திக்காக சிவனுக்கு சங்காபிஷேகம் செய்கின்றனர். அது மட்டுமல்ல! சிவபெருமான் அபிஷேகப் பிரியர். அன்று அவருக்கு சங்காபிஷேகம் செய்வதால் சமுதாயத்துக்கும் நாம் நன்மை செய்தவர்களாவோம்.
 

இந்த அபிஷேகத்தால் உலகில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படும். மழை தேவையான அளவுக்குப் பொழியும் என்பதும் சங்காபிஷேகத்தின் நோக்கம். விரதமுறை: சோமவாரத்தன்று பகலில் ஒரு பொழுதோ அல்லது இரவிலோ உபவாசம் (சாப்பிடாமல் இருப்பது) இருக்க வேண்டும். ஒரு மூத்த அந்தணரையும், அவரது மனைவியையும் வீட்டுக்கு அழைத்து, அவர்களை சிவபார்வதியாகக் கருதி.
 


அவர்களுக்கு புத்தாடை எடுத்துக் கொடுத்து, இயன்றவரை தானம் கொடுக்க வேண்டும். சிவாலயங்களில் சிவபெருமானுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு விநியோகிப்பதுடன், அன்னதானமும் செய்ய வேண்டும்.
 

குற்றால அருவியில் நீராடுவது இந்நாளில் மிகமிக விசேஷம். ஏனெனில், இங்குள்ள குற்றாலநாதர் கோயிலே சங்கு வடிவமுடையது


  கார்த்திகை மாதத்தில் பெரும்பாலும் நான்கு திங்கட்கிழமைகளே வரும். இந்த வருடத்தில் ஐந்து சோமவாரங்கள் வருகிறது. சிவனுடைய முகங்கள் ஐந்து. எனவே பஞ்சாட்சரனான சிவனுக்கு உகந்த இந்த விரதத்தை இதுவரை அனுஷ்டிக்காதவர்கள் நாளை வரும் கடை கார்த்திகை சோமவார விரதம் அனுஷ்டித்தால் கூட  முழு பலனும் கிடைக்கும்.

   விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் சிவாலயங்களுக்குச் சென்று அபிஷேகத்திற்கு தங்களால் இயன்ற திரவியங்கள் வாங்கிக் கொடுத்து சங்காபிஷேகத்தினை கண்டு களித்து சிவன் அருள் பெறலாம்.
    இன்றும் குக்கிராமங்களில் எத்தனையோ சிவாலயங்கள் விளக்கேற்றக் கூட வசதியற்று இருக்கின்றன. அப்படிப்பட்ட சிவாலயங்களுக்கு இந்த சோமவாரத்தில் சென்று தரிசனம் செய்து விளக்கேற்ற சுத்தமான  நல்லெண்ணை வாங்கித் தந்து விளக்கேற்றி வழிபடலாம்.

   சோமவார தினத்தில் சிவாலயம் செல்வோம்! இறைவனருள் பெறுவோம்!

Comments

  1. சோமவார விரதம் பற்றி அறிந்து கொண்டேன். மிக்க நன்றி சுரேஷ்.
    உண்மை தான் இன்று எத்தனையோ குக்கிராமங்களில் சிவன் கோயில்கள் விளக்கேற்றுவதற்கு கூட வசதி இல்லாமல் இருக்கிறது.

    ReplyDelete
  2. சோமவார விரதம் அறிந்தேன்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  3. வணக்கம்
    சோமவார விரதம் பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. எனக்கு புதிய விசயமே,, நன்றி நண்பரே...

    ReplyDelete
  5. சோமவார விரதம் பற்றி அறிந்து கொண்டோம்.நன்றி

    ReplyDelete
  6. தகவல் அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நல்ல தகவல் அடங்கிய பகிர்வு...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சோம வாரம் பற்றிய தங்களின் இவ்வாரப் பதிவு அருமை. புகைப்படங்கள் சிறப்பாக உள்ளன.

    ReplyDelete
  9. சோமவார விரதம் என் தாய் சொல்லி சிறுவயது முதலே இருந்துவருகிறேன். கோவில் சென்று தரிசன்ம் செய்து விட்டு மாவிளக்கு வைத்து வழிபட்ட பின் உணவு அருந்துவேன்.

    நீங்கள் அழகாய் அது பற்றி சொன்னீர்கள்.
    நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!