தீர்க்க சுமங்கலி பாக்கியம் அளிக்கும் சாவித்திரி விரதம்!


     சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்தியடைந்து தேக ஆரோக்கியத்துடன் வாழ்ந்து  தங்களின் சுமங்கலி வாழ்வு நிலைக்க சாவித்திரி தேவியை நினைத்து வழிபடும் நோன்பு சாவித்திரி விரதம் என்னும் காரடையான் நோன்பாகும்.
    பொதுவாக காரடையான் நோன்பு மாசிமாதமும் பங்குனி மாதமும் சங்கிரமணம் ஆகும் வேளையில் நூற்கப்படுவது வழக்கம். நாளை பங்குனிமாதம் பிறக்க உள்ள நேரம் விடியற்காலை நான்குமணி அளவில் இந்த நோன்பை நூற்பது சிறப்பாகும்.

        கார் காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி அரிசி மாவாக்கி இனிப்பு அல்லது உப்பு கலந்து தயாரிப்பதே காரடை ஆகும். முழுத் துவரை  இந்த மாவில் கலந்து காரடை தயார் செய்வார்கள். காரடை வைத்து வழிபடுவதால் காரடையான் நோன்பு என்று பெயர் பெற்றது.
    
      மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதி அவனுடைய மகள் சாவித்திரி வீரமும் விவேகமும் நிறைந்தவள். அஸ்வபதிக்கு புத்திரன் இல்லாமையால் சாவித்திரியை வீரமுடன் மகனைப் போல வளர்க்கிறார் அஸ்வபதி. ஒருசமயம் காட்டிற்கு வேட்டையாடச் செல்லும் போது அங்கு சத்தியவானைக் கண்டு காதல் கொள்கிறாள் சாவித்திரி.

       சத்தியவானின் தந்தை நாட்டை இழந்தவர். அதுமட்டுமல்ல பார்வையும் இல்லாதவர். அவர்களுடன் சத்தியவான் காட்டில் வசித்து வந்தான். சத்தியவானை மணக்க சாவித்திரி விரும்பினாள். அஸ்வபதி அதற்கான ஏற்பாடுகளை செய்கையில் நாரதமுனிவர் வந்து சத்தியவான் இன்னும் ஒரு வருடத்தில் இறந்து விடுவான் என்று சொல்கிறார். ஆனாலும் சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானை மணப்பதில் உறுதியாக இருக்க அஸ்வபதி திருமணம் செய்து கொடுக்கிறார். 
   
      சத்தியவானுடன் காட்டுக்கு வந்த சாவித்திரி பணிவிடைகளை செய்து அவனுடனேயே இருந்து வந்தாள். சத்தியவான் உயிர் பிரியும் நாள் வந்தது. காட்டில் கனி பறித்துக் கொண்டிருந்த அவனை எமன் பாசக் கயிற்றை வீசி  உயிரைக் கவர்ந்து சென்றான். பதிவிரதையான சாவித்திரிக்கு இது தெரிந்து  அவள் பின் தொடர்ந்தாள்.

       பதிவிரதையான சாவித்திரி தன்னை தொடர்ந்து வருவதை அறிந்து  எமன் திரும்ப போய்விடும்படி கூறினான். தன்னுடைய கணவனை திருப்பித் தந்தால் போய்விடுவதாக சாவித்திரி கூற, அது முடியாத காரியம், வேறு என்ன வரம் வேண்டுமானாலும் கேள் தருகிறேன் என்கிறான் எமதர்மன்.

      சாவித்திரி, சமயோசிதமாக , தனது மாமனாரின் பார்வை திரும்ப கிடைக்க வேண்டும் அவர் இழந்த நாடு மீண்டும் கிடைக்க வேண்டும். தனது தந்தைக்கு ஆண்வாரிசு பிறக்க வேண்டும் என்று கேட்கிறாள். கொடுத்தேன் என்கிறான் எமன். பின்னரும் சாவித்திரி தொடர இன்னும் என்ன? என்கிறான். தனக்கு நூறு பிள்ளைகள் பிறக்க வேண்டும் என்கிறாள். ஆகட்டும் என்று சொல்லிவிட எமனை பணிகிறாள் சாவித்திரி தீர்க்க  சுமங்கலி பவ! என்று வாழ்த்தி விடுகிறான் எமன்.
       தன்னுடைய வாக்கை மீற முடியாமல் சத்தியவானை உயிர்பித்து சாவித்திரியுடன் அனுப்பி வைக்கிறான். தன்னுடைய சமயோசித புத்தி பதிவிரதா தன்மையினால்  கணவனை காப்பாற்றியதோடு மட்டும் இல்லாமல் கணவரின் ராஜ்யம், அவர் பெற்றோருக்கு பார்வையை மீட்டுக் கொடுத்து தனது தந்தைக்கு  வாரிசையும்  வரமாக வாங்கித் தந்த சாவித்திரியை போற்றும் வண்ணமும் தீர்க்க சுமங்கலியாக இருப்பதற்காகவும் சாவித்திரி விரதம் கடைபிடிக்கப் படுகிறது.

    இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் சுமங்கலி பெண்கள், காலையில் எழுந்து, முகத்தில் மஞ்சள் பூசி நீராடி, நெற்றியில் குங்குமம் இட வேண்டும். பின்னர் வீட்டை சுத்தம் செய்து பூஜையறைக்குள் கோலம் போட்டு, அங்கு கும்பம் வைக்க வேண்டும். கும்பத்துக்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூ சூட்டி, கும் பத்துக்கு மேலே மஞ்சள் தடவிய நோன்பு கயிற்றை அணிவிக்க வேண்டும். 

இந்த விரதத்தின் போது இறைவனுக்கு நைவேத்தியமாக காரடை செய்து படைக்கலாம். கார் அரிசியை மாவாக்கி, அத்துடன் புதிதாக விளைந்த துவ ரையையும், சேர்த்து அடை தட்டி நிவேதனம் செய்து, அம்மன் மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும்.   ஒரு வெல்ல அடை, சிறிது வெண்ணை இலையில் வைத்து, நோன்பு சரடை அம்மனுக்கு சாற்றி, துளசிச் செடியில் ஒன்று கட்டி, தங்கள் கழுத்திலும் கட்டிக்கொள்வார்கள். உருகாத வெண்ணையும், ஓரடையும் நான் வைத்தேன் ஒரு நாளும் என் கணவர் பிரியாத வரம் தருவாய் ” என்று அம்பாளை நினைத்து வேண்டிக்கொண்டு அம்பாள் ஸ்லோகம் சொல்வார்கள்.

    மாசிக்கயிறு பாசி படியும்  என்ற சொலவடை உண்டு. எனவே இந்த நாளில் புதிய மாங்கல்ய சரடு அணியும் வழக்கமும் உண்டு. தீர்க்க சுமங்கலி வரம் அருளும் இந்த காரடையான் நோன்பினை பக்தி சிரத்தையோடு அனுசரித்து பலன் பெறுவோமாக!

    காரடையான் நோன்பு அடை எப்படி செய்வது என்று இங்கே கற்றுத்தருகிறார் காஞ்சனா ராதாகிருஷ்ணன் தனது வலைப்பூவில். சென்று படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்! மிராவின் கிச்சன், வெல்ல அடை, உப்பு அடை


  சாவித்திரி விரதம் இருப்போம்! சௌபாக்கியம் பெறுவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. வணக்கம்
    ஐயா
    விரதம் பற்றிய மகின்மையை தெரிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!