ஆசை… ஆசை… ஆசை..! பாப்பாமலர்!

ஆசை… ஆசை… ஆசை..!


  கோடை விடுமுறை துவங்கிவிட்டது. தெரு முழுவதும் சிறுவர் பட்டாளம் நிறைந்துகிடந்தது. ஆளுக்கு ஒரு சைக்கிளை எடுத்துக்கொண்டு சுற்றிவந்தனர். பட்டங்கள் விடுவதும், கிரிக்கெட் விளையாட்டு என தெருவே களைகட்டி இருந்தது. சைக்கிள் கடை வைத்திருக்கும் ராமுவும் விடுமுறை வந்ததும் இதுதான் சமயம் என புதிதாக சிறுவர்களுக்கான சிறிய சைக்கிள்கள் சிலவற்றை வாங்கி வாடகைக்கு விட்டிருந்தார்.

   அந்த குட்டி வண்ண வண்ண சைக்கிள்கள் அனைவரையும் கவர்ந்தது. சிறுவர் சிறுமியர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. ஆளாளுக்கு வாடகைக்கு எடுத்து சைக்கிளில் ரவுண்ட் வந்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஐந்தாவது முடித்து ஆறாம் வகுப்பு செல்லும் கோமதிக்கு அழுகையாக வந்தது.

  அன்று காலையில்தான் அவளுடைய அம்மாவிடம் வாடகை சைக்கிளுக்கு பணம் கேட்டாள் கோமதி. “சைக்கிள் ஓட்டி என்னத்தை பெரிசா கிழிக்க போறே?அந்த பத்து ரூபா இருந்தா இன்னிக்கு குழம்புக்கு கறிகாய் வாங்க ஆகும்! போய் வேலையைப்பாருடி போக்கத்தவளே!” என்று கூறிய அவள் தாய் கூலி வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.

  அவள் சொன்னதும் வாஸ்தவம்தான் கோமதியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். சிறுவயதிலேயே தந்தையை இழந்த கோமதியை தாய் கமலா இந்த அளவிற்காவது வளர்த்து படிக்க வைத்து காப்பாற்றி வருவது பெரிய விஷயம். படிப்பறிவற்ற அவள் கூலி வேலைக்குச் சென்றும் பத்து பாத்திரம் கழுவியும் கால்வயிற்று கஞ்சி குடித்துவந்தாள். மகளையும் அரசுப்பள்ளியில் சேர்த்துவிட்டிருந்தாள். இதில் கோமதி வாடகை சைக்கிளுக்கு ஆசைப்படவே அவளுக்கு கோபம் வந்து பொங்கிவிட்டாள்.

  பாவம் சிறுபெண் கோமதி! அவளுக்கும் வீட்டின் கஷ்டம் தெரியும்தான்! ஆனால் ஆசை யாரைவிட்டது? தன்னொத்த பிள்ளைகள் கண் முன்னே சைக்கிளில் வலம் வருகையில் அந்த பிஞ்சுமனதில் கொஞ்சம் சஞ்சலம் ஆசை தோன்றும்தானே! பொதுவாகவே குழந்தைகள் பிற குழந்தைகள் ஒன்று வைத்திருப்பதை பார்த்தால் தனக்கும் வேண்டும் என்று அடம்பிடிக்கும். கிடைத்தபின்னரோ ஒரு ஐந்து நிமிடம் விளையாடிவிட்டு தூக்கி எறிந்துவிடும். எல்லாம் ஓர் ஆசைதான்.

 சைக்கிள் ஓட்ட முடியவில்லையே என்று கோமதி அழுது  கொண்டிருக்கையில் அவள் தோழி மேகலா சைக்கிளோடு வந்தாள்.
“ஏய்! ஏய் மேகலா! நான் ஒரு ரவுண்டு ஓட்டறேனே! ப்ளிஸ்! ஒரேவாட்டிப்பா! எனக்கு ரொம்ப ஆசையா இருக்குப்பா! ப்ளிஸ்! ஒரு ரவுண்ட் கொடுப்பா!” கோமதி கெஞ்சினாள்.

 “நான் தரமாட்டேண்டி! எங்க அம்மா வைவாங்க! அவங்க கிட்ட அடம்பிடிச்சு அழுது பத்து ரூபா வாங்கி சைக்கிள் எடுத்து வந்திருக்கேன்! நான் ஓட்டாம நீ ஓட்டறதை பார்த்தாங்க கொன்னே போடுவாங்க!” மேகலா மறுத்தாள்.

  “ உங்க அம்மா கண்ணுல படாம ஒரே ரவுண்ட் போய் வந்துடறேண்டி! உங்க தெருபக்கம் போகமாட்டேன்! ரொம்ப ஆசையா இருக்குடி! ப்ளிஸ்டி!” கோமதி கெஞ்சினாள்.

  “ சரி! சரி!  எங்க அம்மா கண்ணுல பட்டுடாதே!  இந்தா!”
மேகலா சைக்கிளைத் தர அப்போதுதானே அங்கே மேகலாவின் அம்மா வர வேண்டும்.” ஏண்டி மேகலா  இதுதானாடி! நீ சைக்கிள் ஓட்டற லட்சணம்! சைக்கிளை வாடகைக்கு எடுத்துட்டு இப்படி இவகிட்ட பேசிக்கிட்டு நிக்கறே! பணம் என்ன உங்கப்பன் வீட்டுல காய்க்குதா?”

 அவ்வளவுதான் மேகலா சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடியே போய் விட்டாள். கோமதியால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை! அழுது கொண்டே நிற்கையில் அங்கே புத்தம் புது சைக்கிளில் கையைசைத்தபடி வானதி வருவதைக் கண்டாள். அதைப் பார்த்தவுடன் அழுகையுடன் கோபமும் கலந்துகொண்டது கோமதிக்கு.

 வானதி அவ்வூரில் உள்ள ஓர் செல்வந்தரின் மகள். காண்ட்ராக்டரான அவர் மகள் கேட்கும் எதையும் தட்டாமல் வாங்கிக் கொடுப்பார். செல்வம் கொழிக்கையில் எல்லாமே கிடைக்கும்தானே! அப்படித்தான் வானதி எது கேட்டாலும் மறுக்காமல் உடனே அவள் ஆசையை நிறைவேற்றி வைப்பார் அவளது தந்தை சோமநாதன். பெரிய தனியார் பள்ளியில் படிக்கிறாள். ஒரே தெருவில் வசித்தாலும் அவளோடு  பழகியதில்லை கோமதி. பணக்கார பொண்ணுங்களோடு எதுக்கு சிநேகம்! என்று அவள் அம்மா தடுத்துவிடுவாள்.

“ அடியேய்! உன் பணக்காரத் திமிரை காட்டறியா? இரு உன்னைக் கவனிச்சுக்கறேன்!” கோமதியின் உள்ளத்தில் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எறிந்தது. நிறைவேறாத ஆசை அவளது மனதில் சைத்தானை புகுத்திவிட்டது.

வன்மத்துடன்  வானதியின் வீட்டிற்குள் நுழைந்தாள் கோமதி! நல்ல வேளை வாட்ச் மேன் எங்கோ போயிருந்தான். வாசலில் புன்னை மர நிழலில் அந்த புத்தம் புதிய சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தான் கொண்டு வந்திருந்த ஆணியை எடுத்து சுற்றும் முற்றும்  யாராவது பார்க்கிறார்களா என்று பார்த்தபடி டயர்களில் குத்தினாள். ‘புஸ்’ என்று காற்று வெளியேறவும் தன்னை யாரும் பார்க்கவில்லை என்று நிம்மதி பெருமூச்சுடன் ஓடிவந்துவிட்டாள் கோமதி.

    வீட்டுக்கு வந்தபின் தான் தான் செய்தது தவறு! என்று தோன்ற ஆரம்பித்தது கோமதிக்கு. பாவம் வானதி! எவ்வளவு மகிழ்ச்சியோடு புது சைக்கிளில் வந்தாள். அவள் மனது இப்போது என்ன பாடுபடும்? தனக்கு சைக்கிள் ஓட்ட கிடைக்கவில்லை என்று அவளது சைக்கிளை பஞ்சர் ஆக்கிவிட்டோமே!  இது அவளது தந்தைக்கு தெரிந்தால் என்ன ஆகும்? என்று பலவாறு யோசித்தவாறு திண்ணையில் அமர்ந்திருந்தாள் கோமதி.

 அப்போது சைக்கிளை உருட்டியபடி வந்தாள் வானதி. கோமதிக்கு திக்கென்று இருந்தது. அடடா! பஞ்சரான சைக்கிளை தள்ளிக் கொண்டு நம்மிடம் வருகிறாளே! ஒருவேளை நாம் பஞ்சர் பண்ணது தெரிந்துவிட்டதோ? என்ன சொல்வாளோ? அம்மாவிடம் சொல்லிவிட்டால் அப்புறம் அம்மா நம்மை அடி பின்னிவிடுவார்களே! என்று பலவாறு சிந்திக்கையில்,

 “ என்ன கோமதி! அப்படி பார்க்கறே! சைக்கிளை ஏன் தள்ளிகிட்டு வரேன்னா? பஞ்சர் ஆயிருச்சு! காலையிலேயே நீ சைக்கிள் ஓட்ட ஆசைப்பட்டதையும் மேகலா கிட்ட கெஞ்சி கேட்டதையும் பார்த்தேன்! அப்பத்தான் புதுசா சைக்கிள் வாங்கி ஓட்ட ஆரம்பிச்சதாலே உடனே உன் கிட்டே கொடுக்க தோணலை! கொஞ்ச நேரம் ஓட்டிவிட்டு அப்புறம் கொடுக்கலாம்னு நினைச்சேன்! அதுக்குள்ள எங்க அம்மா கூப்பிட்டதாலே வீட்டுக்குப் போயிட்டேன்! சாயந்திரமா உன்கிட்ட கொடுத்து ஓட்டச் சொல்லலாம்னு நினைச்சேன்! ஆனா பாரு பஞ்சர் ஆயிருச்சு! ரோட்டுல நிறைய ஆணிங்க கிடக்குது போல கவனமா ஓட்டனும்னு எங்க அப்பா சொன்னாரு. வா ரெண்டு பேருமா சேர்ந்து பஞ்சர் கடையில பஞ்சர் ஒட்டிக்கிட்டு சைக்கிள் ஓட்டுவோம்!”  வானதி சொல்ல சொல்ல விம்மி அழுதாள் கோமதி.

   “ஏன்..? என்னடி ஆச்சு? ஏன் இப்படி அழுவுறே?”

“என்னை மன்னிப்பாயா வானதி!” உடைப்பெடுத்த குரலில் தான் செய்த தவறை சொல்லி, ”உன் உயர்ந்த குணத்தை புரிஞ்சிக்காம இப்படி பண்ணிட்டேன் வானதி! ப்ளீஸ்! என்னை மன்னிச்சிரு வானதி என்னை மன்னிச்சு ப்ரெண்டா ஏத்துப்பே இல்லே வானதி!” கோமதி விசும்பலுடன் கேட்டாள்.

   “ எதையுமே செய்ய நினைச்சதும் செய்து முடிச்சிடனும்னு எங்க அப்பா சொல்லுவார்! ஒரு நிமிடம் தாமதித்தாலும் மனசு மாறிடும். உனக்கு சைக்கிள் ஓட்ட கொடுக்கணும்னு நினைச்சேன்! ஆனா புது சைக்கிள் இன்னும் ஒரு ரவுண்ட் வரணும்னு ஆசையாலே தவிர்த்தேன்! அது உன் மனசுல பொறாமையை உண்டு பண்ணிருச்சு! இதுக்கு ஒரு வகையில நானும் காரணம்தான் கோமதி! தப்பு உன் கிட்ட மட்டும் இல்லை! அழாதே! உன்னை நான் மன்னிக்க வேண்டிய அவசியமே இல்லே! ஏன்னா நாம ரெண்டு பேரும் ப்ரெண்ட்ஸ்! என்று கோமதியின் அழுத கண்களை துடைத்துவிட்டாள் வானதி.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. அருமையான கதை நண்பரே
    ஆனாலுலும் இப்பொழுதெல்லாம் தெருவில் விளையாடும் சிறுவர்களை காண்பது அரிதான காட்சியாகி விட்டது
    தொலைக் காட்சியே சரணம் என இருந்துவிடுகிறார்கள்
    நன்றி நண்பரே

    ReplyDelete
  2. சிறுவயதில் எல்லாம் மறந்து உடன் சமாதானமகும் மனம் ஏன் பெரியவர்களிடம் இல்லை.
    தங்கள் கதை அருமை.

    ReplyDelete
  3. நீதி சொல்லும் சிறுவர் கதை நன்று

    ReplyDelete
  4. அருமையான கதை.

    செய்ய நினைக்கும் நற்காரியத்தை உடனே செய்து முடித்திட வேண்டும்.... கொஞ்சம் நேரம் தள்ளினாலும் அதைச் செய்ய முடியாது போகலாம்...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!