Saturday, August 12, 2017

இவரல்லவோ தலைவன்! பாப்பா மலர்!

இவரல்லவோ தலைவன்! பாப்பா மலர்!


  அரபு நாட்டில் உமர் என்பவர் ஆண்டுவந்தார். அவர் மிக எளிமையான வாழ்க்கை நடத்தி வந்தார். நமது அரசியல்வாதிகள் போல பந்தாவும் பகட்டும் அவரிடம் கிடையாது. இருப்பதைக் கொண்டு எளிமையாக வாழ்ந்த அவர் மக்களிடம் நன்மதிப்பு பெற்றிருந்தார்.

   ஒரு சமயம் அவர் ஏமன் நாட்டின் மீது படையெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த படையெடுப்பில் உமர் வெற்றி பெற்றார். அந்த நாட்டின் விலையுயர்ந்த பொருள்களை எல்லாம் உமர் கைப்பற்றினார். பின்னர் அவைகளை மூட்டையாக கட்டி தம் நாட்டுக்கு கொண்டுவந்தார்.

    இன்றைய தலைவர்கள் போல அதை தாமே அனுபவிக்க நினையாமல், அந்த பொருள்களை எல்லாம் தன் வீரர்களுக்கு ஏற்ற தாழ்வு இன்றி சமமாக பங்கிட்டு கொடுத்தார். அதே போல தனக்கும் ஒரு பங்கு எடுத்துக் கொண்டார்.

    ஏமன் நாட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருள்களில் விலை உயர்ந்த ஒரு பட்டாடையும் இருந்தது. அதை அனைவருக்கும் பங்கிட்ட போது ஒரு சிறு துண்டே அனைவருக்கும் கிடைத்தது. அந்த துணியில் தனக்கு மேலாடை தைத்துக் கொண்டார் உமர்.

   அன்று மக்களுக்கு இஸ்லாம் மதத்தின் உயர்வை பற்றி பேசுவதற்காக மதினா நகரத்தில் இருந்த மேடையில் அமர்ந்தார் உமர். அப்போது கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்த ஒருவன் எழுந்து நின்று, "அரசே! நீங்கள் நேர்மையானவர் அல்ல! உங்களை எல்லோரும் புகழலாம்! ஆனால் நேர்மை தவறிவிட்டீர்! இனி உங்கள் கட்டளைக்கு நான் அடிபணிய மாட்டேன்!" என்றான்.

   "நானா? நேர்மை தவறி விட்டேனா? எப்படி?" என்றார் உமர் அமைதியாக.

 "நீங்கள் நேர்மையாக பங்கு பிரிக்கவில்லை! எனக்கு பங்காக கிடைத்த பட்டுத்துணியில் கண்டிப்பாக மேலாடை தைக்க முடியாது. நீங்களோ அந்த துணியில் மேலாடை அணிந்துள்ளீர். நீங்கள் என்னைவிட உயரமானவரும் கூட! நீங்கள் அதிகமாக பாகம் எடுத்துக் கொண்டுள்ளீர்கள்!"என்றான் அவன் ஆவேசமாக.

   "வீர்னே! நீ சற்று பொறுமையாக அமைதியாக இரு! உன் குற்றச்சாட்டுக்கு நான் பதில் அளிப்பதை விட என் மகன் பதில் அளிப்பது சரியாக இருக்கும். மகனே அப்துல்லா! நீ இதற்கு பதில் கூறு!" என்றார் உமர்.

   அதுவரை அமைதியாக இருந்த அப்துல்லா எழுந்தான்.  "மக்களே! நம் அரசர் தனக்கு கிடைத்த துணியில் மேலாடை தைத்துக் கொள்ள விரும்பினார். அதற்கு அந்த துணி போதுமானதாக இல்லை! அதனால் அவருடைய மகனான நான் என் பங்கு துணியையும் கொடுத்தேன். இரண்டையும் சேர்த்து தைத்த துணிதான் அவர் மேலாடையாக அணிந்திருப்பது. இங்கே அமர்ந்து உங்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்கும் அவருக்கு வேறு நல்ல ஆடை இல்லை என்று எனக்கு தெரியும்! எனவே நான் என் பங்கினை அவருக்கு தந்து ஆடை தைத்துக் கொள்ள சொன்னேன்" என்றார்.

    குரல் எழுப்பியவன் தலை குனிந்தான்! மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.

 " இதில் மன்னிப்பதற்கு ஒன்றும் இல்லை! நீ உன் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டாய்  அவ்வளவுதான்! உங்கள் தலைவனின் நேர்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்தான்! நேர்மையற்றவன் தலைவனாக இருக்க அறுகதை அற்றவன்!"  என்றார் அமைதியாக  உமர்.

மீள்பதிவு

பின்குறிப்பு)  தமிழகம் இப்போது இருக்கும் சூழலில் இது போன்ற தலைவர்களின் கதை பிள்ளைகளுக்குத் தேவை என்பதால் மீண்டும் மீள்பதிவு செய்துள்ளேன்! குழந்தைகளுக்கு இந்த கதையை சொல்லி நல்ல தலைவர்களை உருவாக்குங்கள் நண்பர்களே!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, August 10, 2017

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 93

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 93

1. அந்த கட்சியோட மேடைப் பேச்சாளர் எதுக்கு திடீர்னு தனக்கு கட்சியிலே பொறுப்பு வேணும்னு கேட்டு அடம்பிடிக்கிறாரு!

   “பொறுப்பில்லாம பேசறாரு”!ன்னு யாரும் விமர்சனம் பண்ணிடக் கூடாதாம்!

2.  பையன் கமல் ரசிகன்!
    இருக்கட்டும்! அதுக்காக இந்த வாரம் வீட்டுல இருந்து யாரு எலிமினேட் ஆகனும்னு ஒரு நாமினேஷன் வைச்சிக்கலாம்னு சொல்றது கொஞ்சம் கூட நல்லா இல்லை!


3.  .  மந்திரியாரே! அரண்மனை மேன்மாடத்தில் நிறைய புறாக்கள் கூட்டமாக உள்ளதே என்ன விஷயம்?

  ஆட்சியின்  அவலங்களை புறாத் தூது மூலமாக மக்கள் அனுப்பி உள்ளார்கள் மன்னா!


 4. பிக் பாஸ் நிகழ்ச்சியிலே கலந்துக்க வந்த வாய்ப்பை நம்ம தலைவர் மறுத்துட்டாராமே ஏன்?

   அங்கேயும் “ஓட்டு” வாங்கணும்னு சொன்னாங்களாம்!


5  ஜெயிலுக்கு போன தலைவரை மீட் பண்ண போனியே என்ன ஆச்சு!

   ஷாப்பிங் போயிருக்காரு! பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க!


6.  பேச்சாளர்:   எங்கள் கட்சி தலைவர் “சமரசத்துக்கு” தயார் என்று அறிவித்த வேலையில் தக்காளி விலையை ஏற்றி சதி செய்த எதிர் கட்சியினரை வன்மையாக கண்டிக்கிறேன்!

7,  தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது தப்பா போயிருச்சு!

      ஏன்?
அடிக்கடி கட்சிக்கு “ஆபரேஷன்” பண்ணிடுவேன்னு சொல்லி அறிக்கை விட்டுகிட்டு இருக்காரே!


8 . நம்ம தலைவர் எப்பவுமே சொத்து சேர்க்கிறதுலேயே ஆர்வமா இருக்கார்னு எப்படி சொல்றே?
  புதிய இந்தியாவை உருவாக்குவோம்னு சொன்ன உடனேயே அதுல நல்லதா நாலு இடங்களை நம்ம பேருக்கு புக் பண்ணிடனும் சொல்றாரே!

9.  உறவுக்கு பாலம் அமைப்போம்னு தலைவர் கிட்டே சொன்னவங்க நொந்து போயிட்டாங்களா ஏன்?
   அந்த பாலம் கட்டற காண்ட்ராக்டை எனக்கே கொடுத்துருங்கன்னு கேட்டு இருக்கார்!

10. அந்த கிளினிக் போலி கிளினிக்னு எப்படி சொல்றே?
      இவ்விடம்  “அக்குப் பஞ்சர்” போடப்படும்னு போர்டு வைச்சிருக்காங்களே!

11.  என்ன சொல்கிறீர் மந்திரியாரே? எதிரி மன்னன் வைரஸ் தாக்குதல் நடத்துகிறானா?
   ஆம் மன்னா! அவன் அனுப்பிய தூதுப்புறாக்களுக்கு பறவைக்காய்ச்சல் வந்துள்ளது!

12.  மன்னருக்கு  திடீரென்று  ஓவிய ஆசை வந்துவிட்டது போலிருக்கிறது! தூக்கத்தில் கூட “ஓவியத்தை காப்பற்றனும் என்று உளறுகிறார்!
     பாழாப் போச்சு! அது ஓவிய ஆர்வம் இல்லை! ஓவியா ஆர்வம்!

13. எதிரி கூப்பிடு தூரத்தில் இருக்கிறான் மன்னா!
       எந்திரித்து “ கும்பிடு!”  போட்டு விட வேண்டியதான் மந்திரியாரே!

14.  மாப்பிள்ளை பொண்ணை வேண்டாம்னு சொல்லிட்டு ஓடறாரே ஏன்?
         பொண்ணு “ஓவியம்” மாதிரி இருக்கும்னு சொல்லிட்டாங்களாம்!

15. டி.டி. ஆர் வீட்டுல பொண்ணு பார்க்க போனது தப்பா போயிருச்சா ஏன்?
     உள்ளே நுழைஞ்சதுமே “ஆதார் கார்டு” இருக்கான்னு கேக்க ஆரம்பிச்சிட்டாரே!

16.  பையன் பி. இ முடிச்சிருக்கான்!
    வேலை இல்லாம வீட்டுல வெட்டியா இருக்கான்னு சொல்லுங்க!

17. அந்த ஜோஸ்யர் “ட்ரெண்டியான ஆளு”ன்னு எப்படி சொல்றே?
    உங்களுக்கு கொஞ்ச நாள்ள “ரிசார்ட்ஸ் யோகம்” அடிக்கப் போவுதுன்னு சொல்றாரே!

18. இந்த வாரம் என்னை வைத்து ஒரு மீம்ஸ் கூட போடாததில் எதிர்கட்சிகளின் சதி இருக்கிறது ! அதற்காக அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்!

19.  . பாட்டுப் பாடிய புலவருக்கு இன்னும் பரிசில் வழங்க வில்லையாமே மன்னா!
  அவர் இன்னும் ஆதார் கார்டு, பான் கார்டு, அக்கவுண்ட் விவரங்களை சப்மிட்
பண்ண வில்லையே மந்திரியாரே!

 20. தலைவருக்கு சோஷியல் நெட் வொர்க்ஸ்லே பாப்புலாரிட்டி அதிகம்!
     அங்க நல்ல நேம்ஸ் வாங்கியிருக்காருன்னு சொல்லு!
   ஊகும்  நிறைய மீம்ஸ் வாங்கியிருக்காரு!Monday, August 7, 2017

தினமணி கவிதை மணியில் என் கவிதைகள்!

தினமணி கவிதை மணி இணைய பக்கத்தில் சென்ற திங்களன்றும் இன்றும்  வெளியான எனது கவிதைகளை தங்களின் பார்வைக்கு பதிவிட்டுள்ளேன்!
  தொடர்ந்து ஆதரவளித்து வரும் தினமணி குழுமத்திற்கும் தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமத்திற்கும் வலைப்பூ நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்!


ஒரு புள்ளியில் தொடங்கிய பயணம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 31st July 2017 04:24 PM  |   அ+அ அ-   |  
ஒரு புள்ளியில் தொடங்கிய வரிவடிவம்
”அ”கரம் என்ற எழுத்தானது!
ஒரு புள்ளியில் தொடங்கும் ஓவியனின் தூரிகை
அழகிய சித்திரம் தந்தது!
ஒரு புள்ளியில்  தொடங்கி சந்திக்கும் கோடுகள்
இணைகையில் வட்டம் வந்தது.
எத்தனை பெரிய சரித்திரங்களும் தொடங்கியது
ஒரு புள்ளியில் தான்!
ஒற்றாய் ஒற்றி வரும் புள்ளிகளால்
நற்றாய் தமிழ் சிறக்கிறாள்!
அஹிம்சை வழியில் சாதித்த காந்திக்கும்
தென்னாப்பிரிக்க சம்பவம் ஒரு புள்ளியாய்
தொடங்கிய பயணம் தான்!
மதிய உணவு தந்த கருப்பு காந்திக்கும்
ஏழைச்சிறுவன் பதில் ஒரு புள்ளியாய் தொடங்கியது!
அடிமைத்தளைகளை அகற்ற தேசத்தலைவர்களுக்கு
ஆகஸ்ட் புரட்சி ஓர் புள்ளியாய் தொடங்கியது!
அக்னி ஏவுகணை கண்ட கலாமின் கனவும்
ராமேஸ்வரத்தில் ஓர் ஆசிரியரால் புள்ளியாய் தொடங்கியது!
எல்லோர் வாழ்வும் புள்ளியில்தான் தொடங்கும்
அதை பூஜ்யமாக அல்லது ராஜ்யமாக மாற்ற
அவர் தம் திறமை முயல்கிறது!
பிறப்பு என்னும் புள்ளியில் தொடங்கும் பயணம்
இறப்பு என்னும் புள்ளியில் முடிகிறது!
இனிப்பும் கசப்பும் இடை வழியே அதை
இதமாய் கைக்கொண்டால்
ரசிக்கும் புள்ளியாய் நிலைக்கும் நம் பயணம்!

கடல் பயணம்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 07th August 2017 04:28 PM  |   அ+அ அ-   |  
அலை வீசும்  ஆழ்கடலில் அழகாய்
எதிர் நீச்சல் போட்டு எத்தனையோ  
உயிரினங்கள் பலகாலம்  பயணிக்கும்!

உலகம் உருண்டை என உண்மை
சொல்லும் கடல் பயணம்
எல்லொருக்கும் எளிதில் வாய்ப்பதில்லை!
தோணியிலே பயணிப்போர் சிலர்!
கப்பலிலே மிதப்பர் சிலர்!
கட்டுமரத்தில் எதிர் நீச்சலிடுவோர் சிலர்!

கை கால் அசைத்து கடலலைகளை
அரவணைத்து மிதப்பர் சிலர்!
எல்லோருக்கும் அது இன்பமில்லை!
கடலோரம் வசிக்கும் பரதவர்க்கு
கடல் பயணம் ஒரு தொழில்!
கடல் போல வீடு கொண்டோருக்கு
கடல் பயணம் ஓர் உல்லாசம்!
அலுவல் பணி நிமித்தம் செல்லும்
அலுவலர்களுக்கு அது ஓர் அலுப்பு!
உலகம் முழுதும் சுற்றும் கப்பல் தலைவனுக்கும்
ஊழியனுக்கும் அது தாய் வீடு!
தூர இருந்து பார்க்கையில் அழகாய் இருக்கும் கடல்
கிட்டே நெருங்குகையில் ஆபத்தாய் மாறிவிடும்!
வலை வீசூம் மீனவனின் பயணத்தில்
உயிரே கூட விலையாய் போவதுண்டு!
உலை வைக்க வலை வீசீ
எல்லைகளை கடக்கையில்
குலை நடுங்கும் கடல் பயணமாகும்!
அலைகடலில் பயணம்!- அது
அடுத்த நொடி அறியா நம் வாழ்க்கைப்பயணம்!
இன்பங்கள் துன்பமாகலாம்!
துன்பங்கள் இன்பமாகலாம்!
துணிச்சலோடு எதிர் நீச்சலிட்டால்
தூரங்கள் நெருங்கி வரலாம்!
அலைகடலில் பயணம் – அது
அடுத்த நொடியறியா நம் வாழ்க்கை பயணம்!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Thursday, August 3, 2017

” பஞ்ச்”சர் பாபு - பகுதி 1

இந்து தமிழ் நாளிதழில் பஞ்சோந்தி பராக் என்றொரு பகுதி வருகிறது! அதற்கு நானும் சில பஞ்ச்கள் அனுப்பி பிரசுரம் ஆகியிருக்கிறது. பிரசுரம் ஆகாத பஞ்ச்கள் நிறைய இருக்கிறது! 
   அந்த பஞ்ச்களை அவ்வப்போது இப்பகுதியில் வெளியிட உத்தேசம்! உங்கள் ஆதரவை பொறுத்து இந்த பகுதி தொடரும்.

இந்த வார “ பஞ்ச்’ சர் பாபு !

செய்தி: 
பெங்களூர் சிறையில் கன்னடம் கற்கிறார் சசிகலா: டிஐஜி ரூபா தகவல்

பஞ்ச்:  தோழியை ஆட்டுவிச்சது முடிஞ்சிருச்சு! இனி மொழியை ஆட்டுவிக்க போறாங்களோ?


செய்தி: நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நாடகம் ஆடுகின்றன - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்..

பஞ்ச்: “நாடகத்துலே உங்க “ரோல்” என்னன்னு சொல்லவே இல்லையே தலைவரே!


செய்தி: ஏழு வயதில் இருந்தே பொது வாழ்வில் இருப்பவன் நான்- எச்.ராஜா

பஞ்ச்: அப்பவே வீட்டுல “தண்ணி” தெளிச்சி விட்டுட்டாங்களா?

பஞ்ச்: தமிழக மக்களோட ஊழ்வினைதான் காரணம்!


செய்தி: சசிகலா - ரூபா மோதல் திரைப்படமாகிறது - 'குப்பி' ரமேஷ் இயக்குகிறார்

பஞ்ச்: படத்துல “பஞ்ச்” டயலாக் எல்லாம் இருக்குமா?

செய்தி: ஏரி குளங்களோடு தமிழகத்தையும் தூர்வாரவேண்டும்! மு-க.ஸ்டாலின்

பஞ்ச்: அப்புறம் நீங்க எங்க போவீங்க தளபதி?

செய்தி: 
ஒருங்கிணைந்த வளர்ச்சியே கலாமுக்கும்,ஜெயலலிதாவுக்குமான உண்மையான அஞ்சலி: பிரதமர் மோடி உரை!

பஞ்ச்:  அதான் அதிமுக வை ஒருங்கிணைத்து வளர்க்கிறப்பவே தெரிஞ்சுடுச்சு ஜி!

செய்தி: 
ஊழலுக்கு எதிரானவன்; எந்தவொரு கட்சிக்கும் எதிரானவன் அல்ல: விமர்சனங்களுக்கு கமல் பதிலடி

பஞ்ச்: அதான் பாஸ் எல்லோரும் பயப்படறதுக்கு காரணமே!

செய்தி:  ஜெ. இல்லாத வருத்தத்தை உணர்கிறேன்!  மோடி.


பஞ்ச்:   இதைச் சொல்றப்ப  மெல்லீசா ஒரு  “சந்தோஷம்”  தெரியுதே ஜி!

செய்தி: தமிழகத்தின் நீட் மசோதா எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை: நிர்மலா சீதாராமன்

பஞ்ச்:  தமிழகத்துல “வோட்” எங்கிருக்குன்னு மட்டும் உங்க கண்ணுக்கு தெரியுதா மேடம்?


செய்தி: நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம்!  எடப்பாடி பழனிச்சாமி- தமிழக முதல்வர்.

பஞ்ச்:  “ ஆனா “விசில்” அடிக்கிறா மாதிரி தகவல் ஒண்ணும் அங்கிருந்து வரமாட்டேங்குதே!

செய்தி: ரயில்வே வழங்கும் உணவு மனிதர்கள் சாப்பிடுவதற்கு ஏற்றதல்ல : சிஏஜி அறிக்கை

பஞ்ச்:  அப்ப ரயில்ல பயணிக்கிறவங்களை ரயில்வே மனுஷனாவே மதிக்கிறது இல்ல போலிருக்கே!


செய்தி: 

கமலின் அறிக்கை எதிரொலி: காணாமல் போன அமைச்சா்களின் இணையதள முகவரிகள்


பஞ்ச்:  கூடிய சீக்கிரம் அமைச்சர்களும் காணாம போயிருவாங்களோ?

பஞ்ச் 2  ‘ஈ” மெயிலுங்கறதால விரட்டி அடிச்சிருப்பாங்களோ?


செய்தி: 
கர்நாடகம், புதுவையில் காங்கிரஸ் ஆட்சி நடப்பது மத்திய பாஜக அரசின் கண்ணை உறுத்துகிறது : முதல்வர் நாராயணசாமி

பஞ்ச்:  ஒரு வேளை  தாமர”ஐ” நோயா இருக்குமோ?


செய்தி: 

கமல், ஓ.பி.எஸ்., ஸ்டாலின் கூட்டு : அமைச்சர் ஜெயக்குமார்


பஞ்ச்: அவங்க கூட்டு வைக்கிறது இருக்கட்டும் உங்களுக்காக “தாமரை” ”பொரியறாங்களே” ஏன்?


இவை போன மாதம் 21ம் தேதியில் இருந்து அவ்வப்போது இந்துவுக்கு அனுப்ப பட்ட பஞ்ச்கள்! பிரசுரம் ஆகவில்லை!  

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு! எனவே  இங்கு பிரசுரம் செய்து அழகு பார்க்கிறேன்!

உங்களின் பொன்னான கருத்துக்களை தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்!


தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி! 


Related Posts Plugin for WordPress, Blogger...