தித்திக்கும் தமிழ்! பகுதி 29 என் சிவிகை! என் கவிகை!

தித்திக்கும் தமிழ்!  பகுதி 29


உலகமே நிலையாமை தத்துவத்தில் இயங்குகிறது! அடுத்த நொடி என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. ஆனாலும் நான், எனது, என்னுடையது, என் பிள்ளைக்குரியது பெண்ணுக்குரியது என்று எல்லாவற்றையும் நாம் சொந்தம் கொண்டாடி வருகின்றோம்.
   ஆயிரம் கோடிகள் சொத்துக்குவித்து வைத்திருந்தாலும் கடைசியில் மிஞ்சுவது ஆறடி நிலமே! அதுவும் இப்போது கிடைக்க மாட்டேன் என்கிறது. மின் மயானத்தில் எறித்து சாம்பலைத் தந்துவிடுகின்றனர். ஆனாலும் ஆசை யாரை விடுகிறது. இருக்கும் வரை எதெல்லாம் கிடைக்கிறதோ அள்ளிப்போட்டு சேர்த்துக்கொண்டே இருக்கிறோம். பண்டைய காலத்திலும் மன்னர்கள் அப்படித்தான் தன் நாட்டை விரிவு படுத்த படையெடுப்புக்கள் நடத்தி குறுநில மன்னர்கள் பலரை தங்கள் கீழ் படிய வைத்து அவர்களின் பொருட்களை அபகரிப்பார்கள்.
       இந்தியாவில் இருந்த கோஹினூர் வைரம் , மயிலாசனம் போன்றவைகள் அன்னியர் படையெடுப்பில் கைவிட்டுப் போனதை வரலாற்றில் படித்து இருப்பீர்கள். ஒரு பொருள் நம் கைவிட்டு போனபின் மீண்டும் அதை பார்க்க நேர்ந்தால் நம் வாய் சும்மா இருக்குமா? இருக்காது. போன வருஷம் வரைக்கும் இந்த பொருள் என்கிட்டே இருந்தது. என்னோடதா இருந்தது இப்ப இவன் கிட்டே மாட்டிக்கொண்டு தவிக்குது என்று சொல்வோம்! அதோ பார்த்தியா அந்த வண்டி என்னுதுதான்! என் கஷ்ட காலம் இவனுக்கு வித்திட்டேன்! நான் பூ மாதிரி வைச்சிக்கிட்டு இருந்தேன் . இவன் கிட்டே வந்து வண்டி இப்படி கண்றாவியா இருக்குது! என்று வசனம் பேசுவோம்!
    இன்று உனதாயிருக்கும் ஒன்று! நாளை உனது அல்ல! அதை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.  இப்படித்தான் அந்த காலத்தில் ஏகம்பல வாணன் என்ற ஒரு வள்ளல் இருந்தார். அவர் மிகப்பெரிய கொடை வள்ளல். தன்னை நாடி வருவோர்க்கு வாரி வழங்குவாராம். அப்படி அவர் வாரி வழங்கும் பொருளெல்லாம் மற்ற  மன்னர்களை வென்று கொண்டு வந்த நவரத்தினங்களும் பொன்னும் மணியும்.  அப்படி ஏகம்பல வானனிடம் பரிசில் பெற்றுச் செல்லும் புலவர்களை பார்த்து அந்த குறுநில மன்னர்கள் பாடுவதாய் கம்பர் பாடிய பாடல் ஒன்று!
    என்சிவிகை, என்கவிகை, என் துவசம், என்கவசம்,
    என்பரி ஈது, என்கரியீது, என்பரே; - மன்கவன
    மாவேந்தன் வாணன் வரிசைப் பரிசுபெற்ற
    யாவேந்த ரைவேந்தர் பார்த்து.

விளக்கம்:       விரைந்தோடக் கூடிய  குதிரைகளை உடைய வள்ளல் ஏகம்ப வாணனாகிய மன்னனிடம் பரிசு பெற்று வரும் புலவர்களைப் பார்த்த மன்னர்கள் சிலர், இது என் பல்லக்கு, இது என் கவசம், இது என் கொடி இது என் குதிரை, இது என் யானை என்று சொல்வார்கள்.
         ஏகம்பல வாணன் பல மன்னர்களை வென்று அவர்களிடம் அபகரித்த பொருட்களை புலவர்களுக்கு தானமாக வழங்குகின்றான். அதைப்பார்த்த மன்னர்கள் ஐயோ! இதுவரை அது என் பொருளாயிருந்ததே! என்னுடைய சிவிகையும் பல்லக்கும் இந்த புலவர் கொண்டு செல்கிறாரே! என் குதிரையை அந்த புலவருக்கு கொடுத்துவிட்டாரே! என்று புலம்புவார்களாம்!
  ஏகம்பல வாணனின் கொடைச்சிறப்பையும் படைச்சிறப்பையும் ஒரே பாடலில் அழகாக எடுத்துரைத்த கம்பரின் கவிச்சிறப்பை வியப்பதைத் தவிர நாம் வேறென்ன செய்ய முடியும்.


தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments


  1. சிறப்பான பதிவு

    2018-2 மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும்
    https://seebooks4u.blogspot.com/2018/01/2018-2.html

    ReplyDelete
  2. விளக்கம் மிகவும் அருமை...

    ReplyDelete
  3. ஏகம்பல வாணனின் கொடைச்சிறப்பையும் படைச்சிறப்பையும் கூறும் கம்பர் பாடல் சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!